எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க, நாங்க ரெடி! எங்களை வாங்க வைக்க நீங்க ரெடியா?

ஆட்டோமொபைல் துறையில் இப்போது HDK என்பதுதான் டாக் ஆஃப் தி ஏரியா. இது ஏதோ புது எலெக்ட்ரிக் பைக்கோ, காரோ என்று நினைக்க வேண்டாம். Hosur, Dharmapuri, Krishnagiri – இவற்றின் சுருக்கம்தான் இந்த HDK. எலெக்ட்ரிக் ஆட்டோமொபைல் சந்தையில் இந்த மூன்றும்தான் இப்போதைக்கு முக்கிய மும்மூர்த்திகள். ஆம், ஓலா முதல் சிம்பிள் எனெர்ஜி, ஏத்தர் எனெர்ஜி, கிரீவ்ஸ் ஆம்பியர், டிவிஎஸ் என்று ஏகப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தொழிற்சாலையை இந்த HDK–யைச் சுற்றி அமைத்துத்தான், தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரித்து வருகின்றன. HDKதான் பல்லாயிரம் ஆட்டோமொபைல் இன்ஜீனியர்களுக்கு வேலை வாய்ப்பளித்து வருகிறது என்பது தமிழ்நாட்டுக்குப் பெருமைதானே! இந்தியாவில்… அட உலகம் முழுதும் ஆட்டோமொபைல் துறையில் இந்த HDK–வைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா! குளோபல் எலெக்ட்ரிக் டூ–வீலர் மார்க்கெட்டில் HDK ஒரு கீ–பிளேயராக இருக்கப் போகிறது என்பது உண்மை! அதற்கான காரணம் என்ன?

லேட்டஸ்ட்டாக டெஸ்லா நிறுவனத்துக்குக்கூட நமது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்திருந்தது உங்களுக்குத் தெரியும். ‘‘இந்தியாவின் டெட்ராய்டுக்கு உங்களை வரவேற்கிறோம்!’’ என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை அவர் அழைத்திருந்தது உண்மைதான்.

Ola Scooters

நாம் நினைப்பதுபோல் இது ஓவர்நைட்டில் நிகழ்ந்து விடவில்லை. டூ–வீலர் துறையில் தமிழ்நாட்டின் சீனியர் டிவிஎஸ்தான். ஏற்கெனவே, டிவிஎஸ் நிறுவனம் – தனது தொழிற்சாலையை ஓசூரில் அமைத்து, தனது டூ–வீலர்களைத் தயாரித்துக் கொண்டிருப்பது தெரியும். எகிறிவரும் பெட்ரோல் விலை காரணமாக, எல்லோரும் எலெக்ட்ரிக்குக்கு மாறிக் கொண்டிருப்பதை என்றோ கணித்த டிவிஎஸ், லேட்டாகத்தான் தனது முதல் மாடலான ஐ–க்யூப் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தயாரித்தது. 2020-ல்தான் டிவிஎஸ் ஐ–க்யூப் லாஞ்ச் ஆனது.

என்னதான் டிவிஎஸ் சீனியராக இருந்தாலும் – ஏத்தர் எனெர்ஜி, ஓலா போன்றவைதான் எலெக்ட்ரிக் டூ–வீலர்களின் முன்னோடி என்றே சொல்லலாம். 2018–ல் தனது பெங்களூர் தொழிற்சாலையில் ஏத்தர் ஸ்கூட்டரைத் தயாரித்துக் கொண்டு வந்தது ஏத்தர். ஏத்தருக்குத் தாய்வீடு பெங்களூருதான் என்றாலும், இப்போது ஓசூர்தான் புகுந்த வீடு. ஏத்தருக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள், 60% ஓசூரைச் சுற்றித்தான் இருக்கிறார்கள். 99% ஏத்தர் உதிரிபாகங்கள் லோக்கலாகத் தயார் செய்யப்படுகிறது. இதில் பேட்டரி பேக்கும் அடக்கம்.

‘‘பலவித ஆப்ஷன்களுக்குப் பிறகுதான், ஓசூரில் ப்ளான்ட் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்!’’ என்கிறார் ஏத்தரின் முதன்மை அதிகாரி ரவ்நீத் பொக்கேலா. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே ஏத்தர் ஸ்கூட்டர் சாலைகளில் ஓட ஆரம்பித்து விட்டது. இப்போதைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏத்தர் நம்பிக்கையான ஒரு நிறுவனமாக நிலைத்து விட்டது. 2021 ஜனவரியில் ஓசூரில் டயர் பதித்தது ஏத்தர். இப்போதைக்கு ஆண்டுக்கு 1,20,000 ஸ்கூட்டர்களைத் தயாரித்துவரும் ஏத்தர், 4 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் திறன் கொண்ட ப்ளான்ட்டையும் 650 கோடி முதலீட்டில் தயாரிக்கத் திட்டம் தீட்டி விட்டது.

Ather Factory

ஏத்தருக்கு நடுவே ஓலா நிறுவனமும், சந்தடி சாக்கில் 2,500 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க, தமிழக அரசுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கிருஷ்ணகிரியில் உள்ள ஓலா தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாராகி வருகின்றன. இன்னும் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்து, ஸ்கூட்டர்களின் தயாரிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறது. ஸ்கூட்டரோடு, கூடவே எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கும் சேர்த்துத்தான் இந்த முதலீடு! ஓலாவில் ஒரு ஸ்பெஷல் – ஓலா ஸ்கூட்டர் தயாரிப்பில் பெண்களின் ராஜ்யம்தான் இங்கே அதிகம். மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது ஓலாவால்!

கோவையில் இயங்கிவந்த ஆம்பியர் நிறுவனத்தை அப்படியே வாங்கி, ராணிப்பேட்டையில் ஆம்பியர் ஸ்கூட்டரைத் தயாரித்து வருகிறது கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம். 35 ஏக்கர் பரப்பளவில், 700 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 1.20 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கத் திட்டம் தீட்டி வருகிறது கிரீவ்ஸ். இங்கேயும் முழுக்க முழுக்க பெண்களாலேயே ஆம்பியர் ஸ்கூட்டர் தயாராகி வருகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சிவில், டிப்ளமோ, ஆர்ட்ஸ் படித்த கல்லூரி மாணவிகளெல்லாம் இப்போது ஸ்கூட்டர் தயாரிப்பில் கலக்கி வருகிறார்கள் ஆம்பியர் தொழிற்சாலையில்.

Ampere Facoty

லேட்டஸ்ட் வரவு – சிம்பிள் எனெர்ஜி எனும் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம். ஓலா போலவே இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையும் தமிழ்நாட்டில்தான் இயங்குகிறது. ஓசூரில் இதன் தொழிற்சாலையில் ஆண்டுக்கு ஓலா போலவே சுமார் 10 லட்சம் யூனிட்டுகள் தயாராகும் அளவுக்குத் திறன் கொண்டிருக்கிறது சிம்பிள் எனெர்ஜி. ஆண்டுக்கு 1 கோடி ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் திறன் கொண்ட ப்ளான் ஒன்றும் தர்மபுரியில் ரெடியாகி வருகிறதாம். ஏப்ரல் இறுதியில் இருந்து சிம்பிள் ஒன் ஸ்கூட்டர்கள் சாலையில் பறக்கும்.

பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ரா வயலெட் நிறுவனத்திலும் நம் தமிழ்நாட்டு டிவிஎஸ் முதலீடு செய்திருப்பதால்… அதுவும் இங்கே வந்தாலும் ஆச்சரியமில்லை.

தமிழ்நாடு, ‘இந்தியாவின் டெட்ராய்டு’ என்பதெல்லாம் ஓகே! ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க பர்ஸைப் பதம் பார்க்காமல் இருக்கும் FAME-II (Faster Adoption & Manufacturing of Electric vehicles) மானியம், சட்டுபுட்டு என சார்ஜ் போட்டுக் கிளம்ப ஈஸி சார்ஜிங் ஸ்டேஷன்கள் போன்றவை – கர்நாடகா, டெல்லி, குஜராத் போன்ற மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாடு இன்னும் பின்னோக்கி இருக்கிறது என்பதுதான் உண்மை. கர்நாடகாவில் ஒரு EV-க்கு சாலை வரி – ரிஜிஸ்ட்ரேஷன் போன்றவற்றுக்கெல்லாம் கட்டணம் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு ஓலா ஸ்கூட்டரை குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வாங்கினால்… 1.10 லட்சம். இதையே தமிழ்நாட்டில் வாங்கினால் 1.40 லட்சம். இத்தனையையும் மீறி இந்த ஜனவரி மாதம் மட்டும் 27,563 எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கியிருக்கிறார்கள் நம் தமிழ்நாட்டு வாடிக்கையாளர்கள். இது, போன ஜனவரி 2021–யை விட 5 மடங்கு அதிகம்.

அப்படின்னா… எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க நிறுவனங்கள் ரெடி; அதை வாங்க நாமளும் ரெடி! ஆனால், இதை ஊக்குவிக்க அரசு ரெடியா?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.