ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தவும் தெளிவுபடுத்தவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஜெனீவாவில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று (15) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet இன் தற்போதைய அறிக்கையானது, யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விட சுதந்திர நாட்டின் உள்ளக அரசியலை மையப்படுத்தியுள்ளதாக ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
“இதுபோன்ற உள் விவகாரங்களை விசாரிக்க உரிமை உள்ளதா என்றும் அது ஐக்கிய நாடுகளின் சாசனத்தின்படி உள்ளதா என்றும் நாங்கள் கேட்டோம். உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பது வாதம், மேலும் ஒரு நாடு நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைப்பு அவசியம்என்று அவர் மேலும் கூறினார்.
மனித உரிமைகள் பேரவையின் தலைவருடன் இலங்கைப் பிரதிநிதிகளும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
2022ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 51வது அமர்வு இலங்கையின் அடுத்த சவாலாகும்.
சரியான திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் சிவில் சமூகம் மற்றும் கல்வியாளர்கள் உட்பட அனைவரின் ஆதரவும் தேவை என்றும் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் விடுதலைப் புலிகளின் சித்தாந்தவாதிகள் மற்றும் அனுதாபிகள் அடங்கிய மிகச் சிறிய குழுவினால் முன்னெடுக்கப்பட்டதாகவும், அவை இலங்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டரை வருடங்களில், குறிப்பாக கடந்த ஆறு மாதங்களில் ஏற்பட்டுள்ள தெளிவான முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட வெளிவிவகார செயலாளர், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம், உள்ளிட்ட பல சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.