உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உலகின் அபாயகரமான துப்பாக்கிச்சுடும் வீரராக கருதப்படும் ‛ஸ்னைப்பர் வாலி’(sniper Wali) உக்ரைனுக்கு ஆதரவாக களமாடி வருகிறார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தாக்குதலின் வேகம் அதிகரித்துள்ளது. உக்ரைன் அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், காவல் நிலையங்கள், விமான நிலையங்களை மட்டுமே குறிவைத்து தாக்கிய ரஷ்ய ராணுவம் தற்போது குடியிருப்புகள், மருத்துவமனைகளையும் தாக்க தொடங்கியுள்ளன.
உக்ரைனின் மரியூபோல் நகரின் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்ய ராணுவம் கண்மூடித்தனமான ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 2 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், இந்த போரில் அணு ஆயுதம், உயிரி ஆயுதம் பயன்படுத்தப்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா, உக்ரைன் நாடுகள் மறுத்துள்ளன.
ரஷ்ய ராணுவத்துடன் ஒப்பிட்டால் உக்ரைன் ராணுவம் மிகவும் சிறியது. இதனால் உக்ரைனுக்கு உதவி செய்யும்படி சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இதனை ஏற்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதி உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக கனடா ராணுவத்தின் 22வது படைப்பிரிவின் முன்னாள் வீரரான ‛ஸ்னைப்பர் வாலி’ களமிறங்கி உள்ளார்.
40 வயதாகும் இவர் இயல்பில் இரு கணினி மென்பொறியாளராவார். 2009 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் இரண்டு முறை ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றுள்ளார். தொலைவில் இருந்து எதிரிகளை குறிபார்த்து சுட்டு வீழ்த்துவதில் வல்லவரான இவர், உலகின் அபாகரமான ஸ்னைப்பராக கருதப்படுகிறார். ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது அரபு மொழியில் பாதுகாவலர் என பொருள்படும் “வாலி” என்ற பெயரைப் பெற்றார். ஆப்கானிஸ்தானை தவிர சிரியா, ஈராக் போர்களிலும் வாலி பங்கேற்றுள்ளார்.
2017-ம் ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போரில் ஒரு பயங்கரவாதியை 3,450 மீட்டர் (சுமார் மூன்றரை கி.மீ) தொலைவில் இருந்து சுட்டு வீழ்த்தினார். இவரால் ஒரு நாளைக்கு 40 வீரர்களை சுட்டு வீழ்த்த முடியும் என கூறப்படுகிறது. ஒரு நல்ல ஸ்னைப்பரால் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 பேரை சுட்டுவீழ்த்த முடியும். அதுவே சிறந்த வீரர் என்றால் 8 முதல் 10 பேரை மட்டுமே சுட முடியும்.
அண்மையில் உக்ரைன் ராணுவத்தில் இணைந்த இவர் இதுவரை 6 ரஷ்ய வீரர்களை சுட்டு வீழ்த்தியுள்ளார். உலகின் அபாயகரமான ஸ்னைப்பர் வீரர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளது அங்கு ஊடுறுவி வரும் ரஷ்யர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | நீண்ட போருக்கு தயாராகும் ரஷ்யா; தீவிரமடையும் கிவ் மீதான வான் தாக்குதல்கள்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR