புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பதும், அவர்களுக்குத் தீங்கு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் அழுத்தமான சவாலாக இருந்தது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர்.
இவர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரில் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதன் மூலம் உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
அவர்களை அழைத்து வரும் பணியை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். இதனை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முழுமையாக ஒருங்கிணைத்தார்.
இந்தநிலையில் உக்ரைனில் சிக்கிய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்டுக் கொண்டு வந்தது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் இன்று விரிவாக எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
நிலைமை மோசமாக இருந்தது
‘‘உக்ரைனில் தீவிரமாக போர் நடந்து வரும் சூழலில் கடும் சவால்கள் இருந்தபோதிலும் சுமார் 22,500 இந்தியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பியதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில், நாங்கள் ஆபரேஷன் கங்காவைத் தொடங்கினோம். கடுமையான போருக்கு இடையே மிகவும் சவாலான இந்தியர்களை மீட்கும் முயற்சியை மேற்கொண்டோம். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் பயணம் மேற்கொள்வதில் உள்ள ஆபத்தை நாங்கள் புரிந்து கொண்டோம்.
உக்ரைனில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நேரடி ஆபத்தில் சிக்கியிருந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு சபையில் உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, உருவாகி வரும் இந்த சூழ்நிலை குறித்த உலகளாவிய விவாதங்களில் நாங்கள் பங்கேற்றாலும், அங்கு சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பதும், அவர்களுக்குத் தீங்கு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் அழுத்தமான சவாலாக இருந்தது.
வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டு வீச்சு உட்பட ராணுவ நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த மீட்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு பெரிய நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இது நடைபெற்றது. சில சமயங்களில் 1000 கி.மீ. மேல் இந்தியர்கள் பயணம் செய்து பாதுகாப்பான இடத்தை அடையும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. 26 லட்சம் அகதிகள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
போர் காரணமாக உக்ரைன் அதிகாரிகள் வான்வெளியை மூட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் ருமேனியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேசினோம்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசி உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் மற்றும் சுமி ஆகிய போர் மண்டலங்களில் உள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.