தெலங்கானா மாநிலத்தில் கணவர் தொல்லை தாங்க முடியாமல் 4-வது மாடியில் இருந்து ஒரு வயது மகனுடன் மனைவி குதித்ததில், மகன் பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேட்டுகுடாவைச் சேர்ந்த மகேந்திரன்- திவ்யா தம்பதியினருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்திற்கு முன்பு, மகேந்திரன் ஒரு பட்டயக் கணக்காளர் (Charted Accountant) என்று கூறியிருக்கிறார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு, திவ்யா தனது கணவர் வேலையில்லாமல் இருப்பதை அறிந்தார். மேலும் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததையும் கண்டுபிடித்துள்ளார். திருமணத்தின்போது திவ்யா வரதட்சணை கொடுத்த போதிலும் மகேந்திரனும் அவரது குடும்பத்தினரும் மேலும் பணம் கேட்டு திவ்யாவை துன்புறுத்த ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
மகேந்திரனோ அல்லது அவரது குடும்பத்தினரோ திவ்யாவை மதிக்கவில்லை என்றும், அவளை மோசமாக நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு, திவ்யா தன் ஒரு வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின் பக்கத்து வீட்டுக்குச் சென்ற அவர், அங்கிருந்து தனது ஒரு வயது மகனுடன் 4வது மாடியில் இருந்து குதித்துள்ளார். கீழே விழுந்ததும் தரையில் மோதி திவ்யாவின் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திவ்யா மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர், மகேந்திரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்), 498 (ஏ) (குடும்ப வன்முறை), 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM