புதுடெல்லி: கரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்ட நிவாரண நிதியில் முறைகேடு செய்வதாக எழுந்துள்ள புகார் கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக உயிரிழந்தவர்களின் ஆர்டிபிசிஆர் சோதனை அறிக்கை, இறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், குஜராத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி இறப்பு சான்றிதழ் பெற்றுஇழப்பீட்டுத் தொகையை பெறுவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குநீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு உத்தரவு
அப்போது, நீதிபதி எம்.ஆர்.ஷா கூறும் போது, “கரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை போலியான பெயரில் பெற முயற்சித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுவார்கள் என்பதைஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. போலியான பெயரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சேரவேண்டிய தொகையைப் பெறும் அளவுக்கு நெறி தவறி இருப்பது கவலை அளிக்கிறது.
இதில் சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமானால் அது மிகவும் மோசமான செயலாகும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது” என்றார்.