சென்னை: கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் பணிகளுக்கு ஒரே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த யுஜிசி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் 1,400-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி., பட்டம் மற்றும் ‘நெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். தற்போது இந்த தகுதியுடையோர் காலியிடம் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக விண்ணப்பித்து பேராசிரியர் பணியில் சேரும் நடைமுறை இருந்து வருகிறது. இதை ஒழுங்குபடுத்தும் விதமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களுக்கும் ஒரே இடத்தில் விண்ணப்பித்து பணியில் சேரும் வகையில் மாற்றங்களை கொண்டு வர பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் பல்கலைக்கழக மையங்களை இணைக்கும் பாலமாக ‘இன்பிளிப்நெட்’ எனப்படும் தகவல் மற்றும் நூலகங்களை இணைத்து ஒரு இணையதளம் இயங்கி வருகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் உள்ள பேராசிரியர் காலிப் பணியிடங்கள் பட்டியலிடப்பட்டு அதன்மூலம் தகுதியுடைய பட்டதாரிகள் அந்தந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்வது குறித்து யுஜிசி ஆலோசித்து வருகிறது.
பிஎச்.டி பட்டமின்றி பேராசிரியர் பணி
மேலும், புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின்படி, தொழில்துறைக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையே நெருக்கத்தை அதிகப்படுத்த முயற்சி எடுக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக தொழில்துறையில் திறன்வாய்ந்தவர்களை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக நியமித்து கற்பித்தல் பணியை மேற்கொள்வது குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொழில்துறையில் இருந்து பேராசிரியர் பணிக்கு வருபவர்களுக்கு பிஎச்.டி., பட்டம் மற்றும் நெட் தகுதி தேவையில்லை. செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரோபோட்டிக்ஸ், மெக்காட்ரானிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களில் திறன் பெற்றவர்களை பிஎச்.டி., பட்டப்படிப்பு மற்றும் நெட் தேர்ச்சி பெறாத நிலையிலும் பேராசிரியர்களாக நியமித்து அவர்களது திறமையை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு யுஜிசி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதால், இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இந்த வகையில் பேராசிரியர்களை நியமிக்க யுஜிசி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டால் தொழில்துறை நிபுணர்கள் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரந்தர பேராசிரியர்களாகவும் கவுரவ பேராசிரியர்களாகவும் பணியாற்றும் வாய்ப்பு ஏற்படும். இதுகுறித்து சமீபத்தில் நடந்த யுஜிசி நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.