பெங்களூரு: “இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும். இந்த வழக்கில் உடுப்பி அரசு பியூ கல்லூரி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை” என்று தீர்ப்பளித்து, ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம். ஆனால், ’நீதிக்காக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்’ என மீண்டும் பக்கத்தில் ஒரு தொடர் புள்ளியை வைத்துள்ளனர் வழக்கைத் தொடர்ந்த மாணவிகள்.
இந்த வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு விசாரித்தது. மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தேவதத் காமத், ரவிவர்ம குமார் ஆகியோரும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கியும் வாதிட்டனர். உடுப்பி பி.யு. கல்லூரி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.நாகனந்த் வாதிட்டார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன? – இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதன் விவரம்:
1. ஹிஜாப் அணிவது இஸ்லாம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான பழக்கவழக்கம் அல்ல. மேலும், இது அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத உரிமையின் கீழ் வரவில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும். (மனுதாரர்கள் ’ஹிஜாப் தங்கள் மத உரிமையில் கல்லூரி நிர்வாகம் தலையிட முடியாது’ என்று கூறியிருந்தனர்.)
2. பள்ளிகள் கல்வி கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட தகுதிவாய்ந்த பொது இடங்கள். அத்தகைய பொது இடத்தில் தனிநபர் உரிமையை செயல்படுத்தும் முயற்சிகள் செல்லுபடியாகாது. பள்ளிகள் போன்ற பொது இடங்களில் தனிநபர் உரிமை என்பது கூட கல்வி நிலையம், மாணவர்கள் என இருதரப்புக்கும் ஏற்புடைய உரிமையாக உருமாறிவிடுகிறது.
3. பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடை வழங்குவது அரசியல் சாசன சட்டப்பிரிவு சட்டப்பிரிவு 19(1) (a) வழங்கும் பேச்சுரிமையோ அல்லது சட்டப்பிரிவு 21 வழங்கும் தனிநபர் உரிமையையோ பறிப்பது ஆகாது. மேலும், கல்வி நிலையங்கள் ஹிஜாப் அணியத் தடை விதிப்பது என்பது அரசியல் சாசனப்படி அனுமதிக்கத்தக்க தடையே. இதை மாணவர்களால் எதிர்க்க முடியாது. ஆகையால், ஹிஜாபுடன் ஒரு சீருடை, ஹிஜாப் இல்லாத சீருடை என்றெல்லாம் வகைப்படுத்த முடியாது. சீருடை ஒன்றுதான், ஒரேமாதிரியானதுதான்.
4. அரசு பியூ கல்லூரி அதிகாரிகள், கல்லூரி வளர்ச்சிக் குழு அலுவலக ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை.
5. இந்த வழக்கை மொத்தம் 11 நாட்கள் நீதிமன்றம் விசாரித்துள்ளது. 23 மணி நேரம் விசாரணை நடைபெற்றிருக்கிறது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. கர்நாடக அரசு, கல்வி நிலையங்களுக்கு மாணவ, மாணவியர் ஹிஜாப், புர்கார், பருதா, காவித் துண்டு போன்ற மத அடையாளங்களுடன் வரக்கூடாது என்று விதித்த உத்தரவு செல்லுபடியாகும்.
6. ஹிஜாப் விவகாரம் திடீரென பூதாகரமாக வெடித்ததைப் பார்க்கும்போது அதில் கண்ணுக்குத் தெரியாத சில கரங்களின் வேலை இருக்கிறது என்பது புரிகிறது. சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் சூழலில் செயல்பட்டுள்ளனர். கல்வி ஆண்டின் நடுவில் உருவான இந்த சர்ச்சை சில சக்திகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.
7. இந்த வழக்கில் விவாதத்திற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. ஹிஜாப், பர்தா போன்ற உடைகள் பெண் விடுதலைக்கு குறிப்பாக முஸ்லிம் பெண்களின் விடுதலைக்கு எதிரானதாக இருக்கிறது என்றும் வாதிடலாம். பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் அல்ல. மேலும், கல்வி நிலையம் தாண்டி பெண்கள் எந்த மாதிரியான உடையையும் அணியலாம்.
8. இளமைப் பருவம் என்பது எளிதில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய பருவம். இந்தப் பருவத்தில் மாணவர்களின் அடையாளமும், சிந்தனையும் மாறக்கூடியது. இளம் மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறதோ அதன்பால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். அவர்கள் இனம், மதம், மொழி, சாதி, இடம் சார்ந்த தங்கள் சுற்றுப்புறக் கருத்துக்களால் ஈர்க்கப்படலாம். அதனால், இத்தகைய தடை உத்தரவு என்பது பிரிவினையைத் தூண்டும் நிலவரங்களில் இருந்து பாதுகாப்பான சூழலை உருவாக்கித்தர அவசியமாகிறது. இந்தச் சூழலில் மாணவர்களுக்கு சீருடை என்பது கட்டாயமாகிறது.
இவ்வாறு தீர்ப்பில் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது
முதல்வர் வேண்டுகோள்: தீர்ப்பை வரவேற்றுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, ”மாணவர்களுக்கு எல்லாவற்றையும்விட கல்வியே முக்கியம். ஆகையால் உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டுகிறேன். ஆயத்தத் தேர்வுக்கு முன்னதாக செய்ததுபோல் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் பெற்றோருக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுடன் ஒத்துழைக்க வேண்டியுள்ளார்.
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; நீதியல்ல.. “இந்த தீர்ப்பு குறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் ஆதரவு அமைப்பின் மாநில தலைவர் அதுல்லா பஞ்சாகட்டே, இந்த நீதிமன்றம் நீதி வழங்கவில்லை. வெறும் தீர்ப்பு தான் வழங்கியுள்ளது. எங்களின் நீதிப் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
எங்கே ஆரம்பித்தது சர்ச்சை? – கடந்த மாதம் (பிப்ரவரி) கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய கல்வி நிறுவனத்தால் தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்கமகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதைக் கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவித் துண்டு அணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். காவித்துண்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாபா சாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் நீலத் துண்டு அணிந்து ‘ஜெய் பீம்’ என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலோர கர்நாடகாவில் தொடங்கிய இந்தப் போராட்டம் பாகல்கோட்டை, ஹாசன், மண்டியா, கோலார் ஆகிய மாவட்டங்களிலும் பரவியது. ஷிமோகாவில் உள்ள பாபுஜி நகரில் ஏபிவிபி மாணவ அமைப்பினர் முஸ்லிம் மாணவிகளை சூற்றிவளைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். மேலும், தேசிய கொடி கட்டும் கம்பத்தில் ஏறி, காவிக் கொடியை கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்படியாக மாணவர்கள் போராட்டம் பரவ, நிலைமையை சமாளிக்க முடியாமல் அரசாங்கம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இதற்கிடையில், உடுப்பி முஸ்லிம் மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அரசு தடை உத்தரவு: இதற்கிடையில், கர்நாடக அரசு ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வரும்வரை கல்வி நிலையங்களுக்கு மாணவர்கள் எவ்வித மத அடையாளங்களுடன் தொடர்புகொண்ட உடையையும் அணிந்துவரக் கூடாது என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.