மதுரை: சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் மதுரை நகரின் கழிவுநீர் கலக்கிறது. திருவிழாவுக்கு முன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை சித்திரைத் திருவிழாவிற்கும், வைகை ஆற்றிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தைக் காண வரும் அழகர் வைகை ஆற்றில் நீராடி வீட்டிற்கு புறப்பட்டு செல்வார்கள். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி சித்திரைத் திருவிழாவின் சிகரமாக பார்க்கப்படுகிறது. கள்ளழகர் இறங்கும் சித்திரைத் திருவிழாவை காண வரும் மக்கள், ஆற்றங்கரையோரங்களில் தங்கி விழாவில் பங்கேற்பார்கள். அந்த நாட்களில் ஆற்றங்கரையில் அமர்ந்து முடிக்காணிக்கை செலுத்தி நீராடுவார்கள். அதனால், தென் தமிழக மக்கள் வைகை ஆற்றை கங்கை நதிப்போல் புன்னிய நதியாக வழிப்படுகிறார்கள். கடந்த காலங்களில் வைகை ஆற்றில் ஆண்டு முழுவதும் நீரோட்டம் இருந்ததால் சித்திரைத் திருவிழா நாட்களில் ஆற்றங்கரையோரங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும்.
தற்போது மழைக்காலத்தில் குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படுகிறது. பிற காலங்களில் வைகை ஆறு வறண்டே காணப்படுகிறது. சித்திரைத் திருவிழாவுக்கு இயல்பாக தண்ணீர் வந்த காலம் போய், தற்போது கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காக வைகை அணையில் தண்ணீர் பங்கீடும் செய்யும் பரிதாபம் ஏற்படுகிறது. இதன் வறட்சிக்குக் காரணமாக பெரியாறு தண்ணீர் கேரள எல்லையை நோக்கி திருப்பப்படுவதும், நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததும் ஒரு காரணமாக கூறப்பட்டதாலும், ஆற்றுவழித்தடங்கள் முழுவதும் இருந்த மணல் அள்ளப்பட்டு ஆற்றை பராமரிக்காமல் விட்டதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த கால்நூற்றாண்டாக மாநகராட்சிப்பகுதியில் வெளியேற்றப்படும் சாக்கடை நீர், தனியார் நிறுவனங்களின் ரசாய கழிவு நீர், மருத்துவக்கழிவு நீர் மற்றும் கட்டிடக்கழிவுகள் வைகை ஆற்றை முழுமையாக கூவம் நதிபோல் மாசு அடைய செய்துவிட்டது. சித்திரைத் திருவிழா காலத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் நகரின் ஒட்டுமொத்த சாக்கடை நீர் கலக்கிறது. திருவிழா காலங்களில் மட்டும் மாநகராட்சி தற்காலிகமாக தீர்வு காண்கிறது.
தற்போது சாக்கடை நீர் வைகை ஆற்றில் கலக்காமல் தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்தாலும் அப்பணி எப்போது முடிந்து செயல்பாட்டிற்கு வரும் என்பது தெரியவில்லை. தற்போதும் வழக்கம்போல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் மாநகராட்சி சாக்கடை கழிவு நீர் பங்கீரங்கமாக ஆற்றில் கலப்பதால் அப்பகுதியே தூர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு சித்திரைத் திருவிழாவுக்கு முன் சாக்கடை நீர் வைகை ஆற்றில் கலக்காமல் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.