உக்ரைனில் இருந்து திரும்பிய தெலங்கானா மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து,
உக்ரைன்
நாட்டின் மீது, கடந்த சில வாரங்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர்
கீவ்
, கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தின. ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் நாட்டின் முக்கிய கட்டடங்கள், குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக, உக்ரைன் அரசு குற்றம் சாட்டி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் படையெடுப்பு காரணமாக அந்நாட்டில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலைத் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். உக்ரைனில் ஏற்பட்ட போர் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். ஏராளமானோர் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளிலும், பதுங்கு குழிகளிலும் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்க மத்திய அரசு ‘ஆப்பரேஷன் கங்கா’ எனும் திட்டத்தை செயல்படுதியது. இதன் மூலம் 22 ஆயிரம் இந்தியர்களை மத்திய அரசு மீட்டது.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. அவர்களின் எதிர்கால நலனுக்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்று நாடு திரும்பியுள்ள தெலங்கானாவை சேர்ந்த மாணவர்களின் படிப்புக்கான நிதியை அரசே வழங்கும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.