பெங்களூரு-தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் எளிமை குறித்தும், அவர் பள்ளிகளில் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் குறித்தும் கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ், பா.ஜ., உறுப்பினர்கள் பெருமையுடன் பேசினர்.கர்நாடகாவில் கடந்த 4 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.சட்டசபையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த விவாதம்:காங்., – ரமேஷ்குமார்: எங்கள் முன்னோர் எவ்வளவு எளிமையாக இருந்தனர் என்பதற்கு காமராஜர் ஒரு உதாரணம். தமிழக முதல்வராக அவர் பொறுப்பேற்ற பின், தாயை சந்திக்க ஒரு நாள் சொந்த கிராமத்துக்கு சென்றார்.அவ்வளவு நாட்களாக அவரது தாய், பொது குழாயில் தண்ணீர் பிடித்து வந்தார். ஆனால் மகன் முதல்வரானதும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீட்டுக்கு குழாய் இணைப்பு கொடுத்தனர். அந்த தாய்க்கு பெரும் மகிழ்ச்சி.இந்த வேளையில் வீட்டுக்கு வந்த காமராஜரை பார்த்ததும், ‘என்னய்யா ஏதோ பதவி கிடைத்துள்ளதாமே’ என்று ஆரத்தழுவினார். அப்போது, யார் இந்த குழாய் இணைப்பை கொடுத்தது என்று கூறி உடனடியாக துண்டிக்க செய்தார். மற்ற பெண்களை போன்று நீயும் பொது குழாயில் தான் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்று ஒரு முதல்வர் தாயிடம் கூறினார்.பா.ஜ., – ராஜிவ்: மற்றொரு தகவலை நான் சொல்கிறேன். ஒரு நாள், காமராஜர் காரில் சென்று கொண்டுள்ளார். அப்போது சில பிள்ளைகள் விளையாடி கொண்டிருந்தனர். இதை பார்த்த அவர், ஏன் இந்த பிள்ளைகள் பள்ளிகூடத்துக்கு செல்லாமல் உள்ளனர் என்று கேள்வி கேட்டார். இதற்கு, அவர்களின் பெற்றோர் வயலில் கூலி வேலை செய்ய சென்றுள்ளனர். பணம் சம்பாதித்து வந்த பின் தான் வீட்டில் அடுப்பு எரியும். அதன் பின் சமைத்து சாப்பிடும் நிலை உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லாமல் விளையாடி கொண்டுள்ளனர் என அதிகாரிகள் முதல்வரிடம் கூறியுள்ளனர்.உடனடியாக சிந்தித்த காமராஜர், பசியால் பிள்ளைகள் கஷ்டப்பட கூடாது என்று நினைத்து சூடான மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். காமராஜர் தான் நாட்டிலேயே முதல் முறையாக பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.ரமேஷ்குமார்: நீங்கள் எழுந்து நின்றதுமே, காமராஜர் குறித்து பேசுவீர்கள் என்று நினைத்தேன். இப்படி தான் எங்கள் முன்னோர் வாழ்ந்தனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Advertisement