வெப்ப உயர்வு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது ஐ.நா. காலநிலை மாற்றத்துக்கான குழு (ஐபிசிசி). இது தொடர்பாகப் 2022 பிப்ரவரி 28-ம் தேதி, 67 நாடுகளைச் சேர்ந்த 270-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்குகொண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில்,
`நவீன நுகர்வு வாழ்க்கை முறைகளால் இயற்கையை விட அதிகமான வெப்பம் ஏற்படுகிறது. அப்படி உருவாகும் அளவுக்கு அதிகமான வெப்பம் பூமியிலிருந்து வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. இதை வெளியேற்றுவதற்கான வழியை விரைவில் ஏற்பாடு செய்யாவிட்டால் பூமியில் வாழும் உயிர்களின் வாழ்க்கை தரமும், நிலையான எதிர்காலமும் பாதிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கம்
பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் தாக்கத்தைக் குறைந்தபட்சமாகக் கணக்கிட்டாலும், 2100-ம் ஆண்டு உலக வெப்பநிலை 1.5 டிகிரிக்குக் குறைவாகவே உயரும் என்றே எடுத்துக்கொண்டாலும், 2100-ம் ஆண்டு இன்றைய விவசாய நிலங்களில் 8 சதவிகிதம் விவசாயத்துக்கு ஏற்றதாக இருக்காது. ஜனத்தொகை பெருகும். ஆனால், விவசாய பரப்பு குறையும். மும்பையில், 2035-ம் ஆண்டு, 2.7 கோடி மக்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படலாம். வெள்ளம் மற்றும் கடல்மட்டம் உயரும் அபாயம் அதிகம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், 1.1 கோடி மக்கள் நகர்ப்புற வெப்பத் தீவில் வசிக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள். அருகிலுள்ள பகுதிகளைவிட அதிக வெப்பநிலை அங்கு இருக்கும்.
அதே நேரம், உலக வெப்பம் 1.5 டிகிரி அதிகரித்தால், 2010-ம் 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் வாழ்க்கையில் முந்திய தலைமுறையைவிட சுமார் 4 மடங்கு மோசமான விளைவுகளுடைய தீவிர இயற்கை நிகழ்வுகள் ஏற்படும்.
புவி வெப்பம் இருக்க வேண்டியதைவிட 2 டிகிரி அதிகமானால், நிலத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் 18 சதவிகிதம் வரை அழிந்து போகும் அபாயம் அதிகம். 80-லிருந்து 300 கோடி மக்கள் வறட்சியின் காரணமாகத் தொடர் நீர் பற்றாக்குறையை அனுபவிப்பார்கள். 2 டிகிரி அல்லது அதற்கும் குறைவாக வெப்பநிலை அதிகமானாலும் கூட, துருவ விலங்கினங்கள் (மீன்கள், பெங்குவின்கள், சீல் விலங்குகள் மற்றும் துருவக் கரடிகள் உட்பட), வெப்பமண்டல பவளப்பாறைகள் மற்றும் சதுப்புநிலங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.
இதுவே, வெப்பநிலை 3 டிகிரி உயர்ந்தால் வானிலையின் தீவிரம் ஐந்து மடங்கு அதிகரிக்கும். உலக அளவில், கொடிய வெப்ப அழுத்தத்துக்கு ஆளாகும் மக்கள்தொகை சதவிகிதம் தற்போதுள்ள 30 சதவிகிதத்திலிருந்து நூற்றாண்டின் இறுதியில் 48 முதல் 76 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 50 சதவிகித தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிட வாய்ப்பிருக்கிறது என அச்சமூட்டுகிறது அந்த அறிக்கை.
உலக வெப்பம் 4 டிகிரி அதிகரிக்கும்பட்சம், தெற்கு ஆசியாவின் சில பகுதிகளில் வெளியில் பணி செய்வர்களுக்கு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாகும். வேலைத்திறன் கணிசமாகக் குறையும். இதன் விளைவாக உணவு உற்பத்தி குறையும். மற்றும் உணவு விலைகளும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவில் சுமார் 70 சதவிகிதம் இந்தியாவின் ஜனத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
பருவநிலை மாற்றத்தால் அதிக ஆபத்தில் உள்ள நகரங்கள்
2050-ம் ஆண்டு, உலக மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள். வெப்ப அலைகள் (Heat wave) போன்ற தீவிர வானிலையை நகரங்கள் அதிகம் சந்திக்கும். காற்று மாசுபாடு அதிகரிக்கும். போக்குவரத்து, நீர், சுகாதாரம் மற்றும் மின் ஆற்றல் அமைப்புகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பின் செயல்பாட்டை இது பாதிக்கும். மேற்கு, மத்திய மற்றும் தெற்கு ஆசியாவின் வறண்ட மற்றும் வறட்சிக்கு உட்பட அதிகம் வாய்ப்புள்ள பகுதிகளில் வறட்சி ஏற்படும். தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் பருவமழை பகுதிகளில் வெள்ளம், இந்துகுஷ் இமயமலைப் பகுதியில் பனிப்பாறை உருகுதல் ஆகியவற்றுடன் ஆசியா முழுவதும் வெப்ப அலைகளின் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். மேலும், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆசிய நாடுகளில் வறட்சி நிலை 5 முதல் 20 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்கிறது ஆய்வு முடிவு.
இந்தத் தொடர் வெப்ப உயர்வுகளால் சில சமயம், சில இடங்களில் தீவிர நிலைகளால் மீள முடியாத மாற்றங்கள் ஏற்படலாம். உதாரணமாக, இனங்கள் அழிந்து போவது போன்றவை. உலக வெப்பநிலையில் ஒவ்வொரு படி உயர்விற்கும் அதைவிட பன்மடங்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தக் காலநிலை மாற்றங்கள் விவசாய உற்பத்தித் திறன் குறைவு (productivity), மனித ஆரோக்கியத்தின் மீதான தாக்கம், வீடுகளின் அழிவு மற்றும் வருமான இழப்பு போன்றவற்றால் தனிப்பட்ட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாலினம், சாதி, வர்க்கம் மற்றும் பிற சமூக-பொருளாதார சமத்துவமின்மையை அதிகப்படுத்தியுள்ளதாக அறிக்கை ஒப்புக்கொள்கிறது.
எனவே, தட்பவெப்ப மாற்றத்தின் தாக்கத்தைச் சரியாக எதிர்கொள்ள வேண்டும்; தவறான மாற்றுவழிகளைப் பின்பற்றாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாற்றத்தை எதிர் கொள்வதில் 2 வழிகள் இருக்கின்றன!
1. வெட்பத்தணிப்பு:
இதற்கு நிலக்கரி, மற்ற பெட்ரோலிய எரிபொருள்களைக் குறைத்தல், காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் விரிவுபடுத்துதல், தூய்மையான உள்கட்டமைப்பை ஊக்குவித்தல் தேவைப்படுகின்றன.
2. சூறாவளி, புயல்கள், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளைச் சமாளிக்க முக்கியமான உள்கட்டமைப்பை உருவாக்குவது வெப்ப அதிகரிப்பை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள், குறுகிய காலத்தில் கரையோர அரிப்பிலிருந்து பாதுகாக்கும் கடல் சுவர்கள் போன்ற பல உதாரணங்களை அறிக்கை தருகிறது. ஆனால், அவை நீண்ட கால திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படாவிட்டால், காலநிலை அபாயங்கள் நீண்ட காலத்துக்கு வெளிப்படும்.
“சரியான வழிமுறையைத் தேர்ந்தெடுக்க எடுக்கும் நேரத்தைத் திட்டமிடுதல், காலநிலை அபாயத்தின் வீதம் மற்றும் அளவுபற்றிய நிச்சயமற்ற தன்மை, எடுக்கும் நடவடிக்கைகளின் பாதகமான விளைவுகள்” ஆகியவற்றை அறிந்து செயல்படுவதின் மூலம் தவறான நடவடிக்கையைக் குறைக்கலாம்.
தவறான மாற்றத்துக்கு உதாரணம், மும்பை கடற்கரை சாலை திட்டம். இது வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கும், கடல் மட்ட உயர்விலிருந்து பாதுகாப்பதற்குமான திட்டம். ஆனால், இது கடல் அலைகள், தாவரங்கள் மற்றும் உள்ளூர் மீன்பிடி வாழ்வாதாரங்களுக்கு சேதம் விளைவிக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஐபிசிசி அறிக்கை அகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய இரண்டு நகரங்களை ஆய்வு செய்தது. அகமதாபாத்தில் பருவநிலை மாற்றத்தைத் தணிப்பதில் சிறந்த உள்கட்டமைப்பு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடுத்தரமான உள்கட்டமைப்பு முன்னேற்றம் உள்ளது.
இந்த செயல் திட்டங்கள், வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்குதல், வெப்ப அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் குளிர் கூரை நிறுவும் கொள்கைகள் போன்றவற்றை உள்ளடக்கியது.
ஃப்ளாவியா லோப்ஸ் மற்றும் தன்வி தேஷ்பான்டே
நன்றி: இண்டியாஸ்பென்ட் (IndiaSpend)
தமிழாக்கம்: கே.ஆர். சங்கரன்