மதுரை: கால் நூற்றாண்டாக சிதைந்துபோன மதுரை நகர சாலைகள் சீரமைப்பட வேண்டும் என்பது புதியதாக பொறுப்பேற்றுள்ள மேயரிடம் மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரை மாநகராட்சியில் கடந்த 6 ஆணடுகளாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் தெரிவிக்க முடியாமல் முழுக்க முழுக்க அதிகாரிகளை நம்பியே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், சாலைகள் பராமரிப்பு, சுகாதாரம், குடிநீர் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு போன்ற அத்தியாவசியப் பணிகள் முடங்கிப்போய் இருந்தன.
மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணியும், 100 வார்டுகளுக்கும் கவுன்சிலர்கள் தற்போது பொறுப்பேற்றுள்ளனர். நகரின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் மக்கள் அவர்களிடம் எதிர்பார்க்கும் முதல் கடமையாக உள்ளது. ஒருநாள் மழைக்கே மதுரை மாநகரின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளக்காடாக மாறும் அவலத்துக்குத் தீர்வு காண்பது, சாலைகள், குடிநீர், தூய்மைப்பணிகள் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது மேயரிடம் மக்கள் எதிர்பார்க்கும் முதல் கடமையாக உள்ளது.
தற்போது மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை அமைத்தல் உள்ளிட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மாத கணக்கில் சீரமைக்கப்படாமல் மக்களையும், வாகன ஓட்டிகளையும் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாநகராட்சியில் 13 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளும், 74.4 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகளும், 1,545 கி.மீ., மாநகராட்சி சாலைகளும் உள்ளன. இதில், 265 கி.மீ., சாலைகள் பஸ்கள், கனரக வாகனங்கள், கார்கள் சென்று வருகின்றன. 1,253 கி.மீ., சாலைகள் குடியிருப்பு சாலைகளாக உள்ளன.
மோசமான நிலையில் மாட்டுத்தாவணி மார்க்கெட் சாலைகள்: ஒரு நகரின் வளர்ச்சிக்கு அதன் சாலைகள்தான் அடிப்படையாக இருக்கிறது. ஆனால், மதுரையில் அந்த அடிப்படையே சிதைந்துபோய் காணப்படுகிறது. சமீபத்தில் 258 புதிய சாலைகள் ரூ.40 கோடியில் போடுவதற்காக பூமி பூஜைகள் போட்டு பணிகள் தொடங்கின. ஆனால், எங்கு பணிகள் நடந்து புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. ஆனால், நகரின் அனைத்துப் பகுதிகளிலும் திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் சாலைகள் பயணிக்க முடியாத அளவிற்கு படுமோசமாக இருக்கின்றன.
மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் முதல் அப்போலோ வரையிலான வண்டியூர் கண்மாய் ஏரி சாலை முழுவதுமாக சேதமடைந்துள்ளன. இந்த சாலையில் மார்க்கெட்டிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு வரும் கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள், பஸ்கள் மற்றும் கார்கள் 24 மணி நேரமும் சென்று வருவதால் பரபரப்பாக இந்த சாலை காணப்படும்.
மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்களில் வரும் நோயாளிகள் அவதி: இந்த சாலையில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் இருப்பதால் ஆம்புலன்ஸ் வாகனங்களும் அடிக்கடி வந்து செல்கின்றன. ஆனால் சாலை முழுவதும் குண்டும், குழுயுமாக உள்ளன. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்தும், குழிகளில் ஏறி இறங்குவதால் ஆடியப்படி செல்கின்றன. சாலையின் நடுவில்தான் பயணிக்க முடியாது என்றால் ஓரமாக மாநகராட்சிப் பணியாளர்கள் பல்வேறு பணிகளுக்காக தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் சென்றுள்ளனர். அதனால், சாலையோரம் வாகனங்களை பார்க்கிங் செய்ய முடியவில்லை. மண், மணல், கற்கள் குவிந்து கிடப்பதால் சாலையோரம் மறந்து வாகனத்தைவிட்டால் விபத்துகள் ஏற்படுகின்றன.
மழைக்காலத்தில் சாலையின் நடுவில் உள்ள பள்ளங்களில் மழைநீரும், ஓரங்களில் சேறும், சகதியுமாக உள்ளன. அதுபோல், மதுரை அரசு மருத்துவமனை பனங்கல் சாலை விசாலமாக இருந்தாலும், சாலையின் இரு புறமும் தனியார் ஆம்புலன்ஸ்கள், ஷேர் ஆட்டோக்கள், கனரக வாகனங்களை பார்க்கிங் செய்வதால் இந்த சாலையில் போக்குவரத்து நிரந்தரமாக ஸ்தம்பிக்கின்றன. அதனால், அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ், பணியாளர்கள், நோயாளிகள் மருத்துவமனைக்கு வர முடியாமல் திண்டாடுகின்றனர்.
போக்குவரத்திற்கு லாயக்கற்ற நகரின் சாலைகள்: கே.கே.நகர் 80 அடி சாலையில் எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் ஆரம்பித்து வைகை ஆறு வரை செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியமாக கடந்த சில வாரம் வரை காணப்பட்டது. தற்போது அந்த சாலையை புதிதாக போடாமல் தற்காலிகமாக பள்ளங்களில் பஞ்சர் மட்டும் பார்க்கப்பட்டுள்ளன. அதனால், தற்போதைக்கு அந்த சாலை போட வாய்ப்பில்லை. அதுபோல், சிம்மக்கல் சாலை, எல்லீஸ் நகரில் சாலைகளில் நடுவில் பாதாள பள்ளங்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. வாகனங்களும் சேதமடைகின்றன.
இந்த சாலைகளை போன்றுதான் நகரின் அனைத்துச் சாலைகளும் மிக மோசமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. பெரும்பாலான சாலைகள், மிகக் குறுகலாக இருப்பதால் அந்த சாலைகளில் ஒரு இடத்தில் ஷேர் ஆட்டோ, லாரி பார்க்கிங் செய்தால் அதன் தொடர்ச்சியாக தொடர்புடைய அனைத்து சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. சாலையோரங்களில் தனியார் ஆக்கிரமிப்பும், தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பும் பெருகிவிட்டதால் நடைபாதைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை.
நகரெங்கும் சாலை அருகே பார்க்கிங் வசதி இல்லை: மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் மட்டுமில்லாது நகரின் அனைத்து சாலைகளிலும் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களுக்கு பார்க்கிங் வசதி இல்லை. அதனால், அந்த நிறுவனங்கள், மண்டபங்களுக்கு வரும் வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்படுவதால் அந்த சாலைகளை வாகன ஓட்டிகள் கடந்து செல்வது பெரும் சிரமமாக உள்ளன. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய மாநகர போக்குவரத்து போலீஸார், நகரச்சாலைகளில் தடுக்கி விழுந்தால் அருகே அருகே தானியங்கி சிக்னல்கள் அமைதுள்ளனர்.
சிறந்த தரத்துடன் மாநகராட்சி சாலைகள் அமைய வேண்டும்: அதனால், சிக்கனல்களில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நேரம் அதிகரிக்கிறது. மதுரை மாநகராட்சி சுற்றுலாவையும், மருத்துவத்தையும் அடிப்படையாக கொண்டே அதன் வர்த்தகமும், வருமானமும் அமைந்துள்ளது. ஆனால், தற்போது நகரச்சாலைகளில் இந்த இரு துறைகளும் வளர்ச்சியும் கேள்விகுறியாகி நிற்கிறது.
அதனால், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி மேயர் தன்னுடைய முதல் நடவடிக்கையாக நகர சாலைகள் கட்டமைப்புகளை மேம்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற நகர சாலைகளில் தடையில்லாப் போக்குவரத்தை ஏற்படுத்துவதே அவர் முன்நிற்கும் முதல் சவாலாக உள்ளது. அவர் மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல்துறை ஆணையாளர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி சாலைகளைப் பராமரிக்கும் பொறியாளர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு நகரின் நகரின் பிரதான சாலைகள், மையப்பகுதி சாலைகளை உடனடியாக தேசிய நெடுஞ்சாலை தரநிலை (MORTH) அடிப்படையில் சிறந்த தரத்துடன் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதோடு நகரச்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே மதுரை நகர் மக்களிடம் மேயரிடம் எதிர்பார்க்கின்றனர்.