குழந்தைகளுக்கு பால் வழங்க பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் அங்கீகரிக்கப்படாத போதிலும், பொலிகார்பனேட்டினால் (Polycarbonates) தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பால் போத்தல்கள் இலங்கையில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.மேலும் தரமான பால் போத்தல்களை தயாரிப்பவர்களுக்கு அனுமதி வழங்கும் வசதிகள் இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் கொண்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழ், குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பால் போத்தல்களை இறக்குமதி செய்ய பதினெட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களால் மாத்திரம் இதனை இறக்குமதி செய்ய முடியும் என்றும், பதிவு செய்யப்படாத நிறுவனங்களால் விற்கப்படும் பொருட்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்படி பணியகம் தெரிவித்துள்ளது.