கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தடவாடகை மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வரையுள்ள மண்டலங்களின் தெருவிளக்கு மின்கம்பங்களில் கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் ஒயர்கள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு தடவாடகை வசூலிக்கப்படுகிறது.
மேலும், இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் சார்பில் தனி கம்பங்கள் அமைத்தும் இன்டர்நெட் ஒயர்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.
அதனடிப்படையில், மின்துறை மூலமாக தெருவிளக்கு கம்பங்களில் உள்ள உபயோகமில்லாத மற்றும் தடவாடகை செலுத்தாத கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் நிறுவனங்களின் 74.60 கி.மீ. நீளமுள்ள ஒயர்கள் அகற்றப்பட்டுள்ளது.
மேலும், 59.91 கி.மீ. நீளமுள்ள ஒயர்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, மின்துறை மூலமாக உபயோகமில்லாத மற்றும் தடவாடகை செலுத்தாத நிறுவனத்தின் ஒயர்களை அகற்றுதல் மற்றும் ஒழுங்குப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
எனவே, கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தடவாடகை மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.