புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் 28 சதவீத முஸ்லீம்கள் உள்ளனர். இவர்களால், தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு 100-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மேலும் 60 தொகுதிகளில் 20 முதல் 35 சதவிகிதம் உள்ளனர். ஒட்டுமொத்த மாநிலத்தின் 403 தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 10 சதவிகித முஸ்லீம்கள் எண்ணிக்கை உள்ளது.
இச்சூழலில் உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி கூட்டணி சார்பில் 63, பகுஜன் சமாஜ் கட்சியில் (பிஎஸ்பி) 86 மற்றும் காங்கிரஸில் 60 முஸ்லிம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர்களில் பிஎஸ்பி, காங்கிரஸ் கட்சியில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், சமாஜ்வாதியில் 31, அதன் கூட்டணிகளான ராஷ்டிரிய லோக் தளத்தில் (ஆர்எல்டி) 2, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியில் (எஸ்பிஎஸ்பி) ஒருவர் என மொத்தம் 34 முஸ்லிம் வேட் பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த 34 பேரும் உ.பி.யின் மேற்கு (21), கிழக்கு (7) மற்றும் (6) மத்தியப் பகுதிகளில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலை போலவே பாஜக.வில் இந்த முறையும் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், பாஜக கூட்டணி கட்சி அப்னா தளம் (சோனுலால்) சார்பில்ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் போட்டியிட்டார். ஐம்பது சதவிகித்துக்கு மேல் முஸ்லிம்கள் மக்கள் தொகை உள்ள ராம்பூரில் போட்டியிட்டும் அப்னா தள வேட்பாளருக்கு தோல்வியே கிடைத்தது.
இந்த தேர்தலில் சமாஜ்வாதியின் முக்கிய தலைவர் ஆஸம்கான் மற்றும் நாஹீத் ஹசன் (ஷாம்லி) ஆகியோர் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஆஸம் கான் மகன் அப்துல்லா ஆஸமின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தலின் போது அப்துல்லா, வயதை அதிகரித்துக் காட் டியதாகப் பதிவான வழக்கு காரணமாக அவரது தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு அப்துல்லா வென் றார்.
காஜிபூரில் கடந்த 1996 முதல் பல்வேறு கட்சி மற்றும் சுயேச்சையாக வென்ற முக்தார் அன்சாரி, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இவருக்கு பதிலாக போட்டியிட்ட அவரது மகன் அப்பாஸ் அன்சாரி எஸ்பிஎஸ்பியில் வென்றுள்ளார். முஸ்லிம்கள் அதிகமுள்ள 19 தொகுதிகளில் முஸ்லிம்கள் பலர் பல கட்சிகள் சார்பில் போட்டியிட்டதால் வெற்றி பெற முடியவில்லை. ஒவைஸி கட்சி போட்டியிட்ட 103 தொகுதிகளில் 60 பேர் முஸ்லிம்கள். அவர்கள் அனைவருமே ‘டெபாசிட்’ இழந்துள்ளனர். உ.பி.யின் சிறிய முஸ்லிம் கட்சி ‘பீஸ் பார்ட்டி’ களம் இறக்கிய முஸ்லிம் வேட்பாளர்களும் குறிப்பிடும்படி வாக்குகளை பெறவில்லை.
இந்த தேர்தலை விட கடந்த 2017-ல் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் மொத்தம் 24 பேர் மட்டுமே எம்எல்ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சமாஜ்வாதியில் 17, பிஎஸ்பி 5 மற்றும் காங்கிரஸில் 2 முஸ்லிம்கள் அப்போது வெற்றி பெற்றனர். இதற்கு கடந்த தேர்தலில் முஸ்லிம்களின் கணிசமான வாக்குகள் பாஜக.வுக்கு கிடைத்ததே காரணம்.
உ.பி. சட்டப்பேரவையில் 1951 முதல் முஸ்லிம்கள் தேர்வாகி வருகின்றனர். இதில் மிகக் குறைவாக 1991-ல் 23, அதிகமாக 2012-ல் 68 முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.