பெங்களூர்:
கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் உள்ள ஹூவினஹடகலி நகரத்தில் உள்ள பஸ் நிலையத்தின் அருகே சிறிய குடில் அமைத்து வசித்து வந்தவர் பசப்பா என்கிற ஹுச்சா பாஷ்யா.
இவர் 40 ஆண்டு காலமாக இங்கு வாழ்ந்து வந்தார். மேலும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். தனது வாழ்க்கையை நடத்துவதற்காக பொது மக்களிடம் பிச்சை எடுத்து அடிப்படை தேவையை நிறைவு செய்து வந்தார்.
பிச்சை கேட்கும் போது பொதுமக்களிடம் அவர் ஒரு ரூபாய் மட்டுமே கேட்பார். அதற்கு மேல் கொடுத்தால் வாங்கமாட்டார். ஒரு ரூபாய் பிச்சை கொடுப்பவர்களை அவர் வாழ்த்தி ஆசீர்வதிப்பார். இதனால் அவர் அந்த பகுதியில் மிகவும் பிரபலமாக விளங்கினார்.
அவருக்கு உணவு வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட சிறு சிறு உதவிகளையும் பொது மக்கள் செய்து வந்தனர். அவர் யாருக்கும் எந்த தொல்லையும் கொடுப்பது இல்லை என்பதால் அவரை மக்கள் நேசித்து வந்தனர்.
அவர் எங்கிருந்து அங்கு வந்தார்? அவரது உறவினர்கள் யார் என்ற விவரம் யாருக்கும் தெரியாது. அவரை பிச்சைக்காரர் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அங்கேயே தங்க வைத்தனர்.
இவர் அனைவரிடமும் சிரித்து பேசும் குணம் கொண்டவர். இதனால் பொதுமக்கள் பலருக்கும் அவரை பிடிக்கும்.
இந்தநிலையில் பசப்பா சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கினார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அவரது குடில் முன்பு கூடினார்கள். அவருக்கு சொந்தம் என யாரும் இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறு சிறு தொகையை நன்கொடையாக சேர்த்து அவருக்கு இறுதி சடங்கு செய்து உடலை தகனம் செய்தனர்.