தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான ‘கனா’ திரைப்படம், வரும் வெள்ளிக்கிழமை சீனாவில் வெளியாகிறது.
பாடலாசிரியர், பாடகர், நடிகர் என பன்முகத் திறமையால் அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ், இயக்குநராக அறிமுகமான படம் ‘கனா’. கிராமத்தில் வளரும் பெண் ஒருவர் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுவதும், அதனால் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். சத்யராஜ், தர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழில் பெரிய வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் ‘கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளது. இந்நிலையில், ‘கனா’ திரைப்படம் சீனாவிலும் வெளியாகவுள்ளதாக கடந்த நில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. சீன மொழியிலும் தங்களது படம் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் அனைவரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்திருந்தனர்.
சீனா என்றால் அதிகப்படியான திரையரங்குகள் வெளியாகி, வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறது படக்குழு. இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை இந்தப் படம் சீனாவில் வெளியாகிறது. ரஜினியின் ‘2.0’ படத்திற்குப் பிறகு, ‘கனா’ படம் சீனாவில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.