பீஜிங்:
உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது சீனாவில்தான். அங்குள்ள வுகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கும் பரவி, ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது.
கொரோனாவின் முதல் அலையின்போதே நாடு தழுவிய முழு ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடு, அதிகளவு பரிசோதனை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சீன அரசு நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இதற்கிடையே, புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தாக்கத்தால் சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனால் சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,393 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சீனாவில் நேற்று புதிதாக 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
2 ஆண்டாக கொரோனா தாக்கம் இல்லாத நிலையில், கடந்த சில தினங்களாக நோய் பாதிப்பு அதிகரித்து வருவது அந்நாட்டினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்…உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன், ரஷிய அதிபர் பேச்சு