சென்னை ராயபுரத்தில் கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிச்சாண்டி லைலன் தொப்பை தெருவில் வசித்து வந்த மகசர் அலி – பரக்கத் நிஷா தம்பதிக்கு 15 வயதில் நசீரா பானு எனும் மகள் இருக்கிறார்.
நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய நசீரா, வீட்டின் கதவு உள்புறமாக பூட்டியிருந்ததால் கதவை தட்டியுள்ளார். வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது மாமா முகமத் ரோஷன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த அவர் கதவை உடைத்து பார்த்த போது, இருவரும் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், இருவரும் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ள நிலையில், கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.