சென்னை
சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தை மறுவடிவமைப்பு செய்ய தெற்கு ரயில்வே சர்வதேச அளவில் டெண்டர் கோரி உள்ளது.
தெற்கு ரயில்வே ரயில் நிலையங்கள் மேம்பாடு மற்றும் பழமையான ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்தல் ஆகிய பணிகளை நடத்தி வருகிறது. அவ்வகையில் சென்னை எழும்பூரில் உள்ள ரயில்நிலையம் மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரி தெற்க் ரயில்வே சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வடிவமைப்பில் புறப்பாடு நடைமேடைகள், நடைபாதை மேம்பாலங்கள், சுரங்கப்பாதை,, பார்சல்களை எடுத்துச் செல்லும் மேம்பாலம், மல்டி லெவல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றின் விரிவான வடிவமைத்தல் மற்றும் கட்டுமானத்துக்கான பணிகள் அடங்கும்.
இதைத் தவிர தற்போதுள்ள ரயில் நிலைய கட்டிட விரிவாக்கம், நடைமேடை கூறைகள், நடைமேடை மேற்பரப்பின் மீது நடைபாதை அமைத்தல், வணிக சேவை மற்றும் பார்சல் கட்டிடங்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது..
இந்த திட்டம் நடைமுறை பணிகளுக்கு இடையில் நடைபெறும் திட்டம் என்பதால் ஒப்பந்ததாரர் நிலையத்தில் ரயில் இயக்கங்களை பாதிக்காதா வகையில் தற்போதுள்ள ரயில் நிலையப்பகுதியில் மறுவடிவமைப்பை மேற்கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை நகருக்கு எழும்பூர் ரயில்நிலையம் ஒரு முக்கியமான அடையாளம் என்பதால் இந்த புனரமைப்பு மற்றும் புதிய முனைய வடிவமைப்பு ஏற்கனவே உள்ள பாரம்பரிய கட்டமைப்புக்கு எவ்வித இடையூறும் இன்றி அதனுடன் ஒட்டியபடி அமைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.