செம்பா: “பாரபட்சமற்ற கதிரவனல்ல… பசித்தலையும் தீ’’ | பகுதி 26

விண்மீன்கள் ஒளிர்ந்த வானையே வெறித்தபடி கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கிடந்தான் இஜினாசி. பொறுப்பை இருளின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு கடை சாத்திக்கிளம்பியிருந்தது ஒளி.

சுற்றிலும் பார்த்தான். ஊரடங்கிருந்தது. இரும்பாலையும் அன்றைய நாளின் கடைசிப் பணிகள் முடிந்து மெல்ல இருளுக்குள் சுருண்டு கொண்டிருந்தது. ஆலைக் கூம்புகளின் நெருப்புகள் கறுத்து உறக்கத்தில் விழத் தொடங்கியிருந்தன. கண்கள் கண்ட காட்சிகளைக் கொண்டு தன் மனதின் கேள்விகளுக்கெல்லாம் காலத்தைப் பதிலாக்கிப்பார்த்தான் இஜினாசி.

`கண்ணுக்ககப்படாத கரங்கள் கொண்டு காலம் தான் எப்படி அனைவரையும் அடக்கிவைக்கிறது? இல்லை காலம் அடக்குவதில்லை. மக்கள் தாமாகத்தானே அடங்கிப்போகிறார்கள்! பெரிதாக ஏதும் செய்யாமலே மக்கள் தம் வாழ்வை அவனைச்சுற்றி அமைத்துக் கொள்ளத்தூண்டும் மாய அசுரன் காலம். அந்த சுரோவைப்போல.’

வான் பார்த்தான். விண்மீன்கள் இருட்டில் மினுமினுத்தன.

கறைகளகன்ற நிலவு போல நிர்மலமாய்க்கிடந்த அவன் மனதில் தூய பரிசோதனை நடந்து கொண்டிருந்தது.

‘சுரோ தனக்காக எதையும் செய்வதில்லை. அவனது பெரும்பான்மைச் செயல்களையும் பிறரை மனதில் கொண்டே செய்கிறான். ஆனால் நான் அப்படியல்ல. எல்லாவற்றிலும் என்னை முதன்மையாக்குகிறேன். ஆனால் அது தவறா? ஏன் தவறு? என்னை முதன்மைப்படுத்தினாலும் யாருக்கும் தீங்கு நினைப்பவனில்லையே நான்? நானும் நல்லவன் தானே? நானும் விண்மீன் தான். நானும் ஒளி பொருந்தியவன் தான்.’

“இருவரும் ஒளி தான். அவன் பாரபட்சமற்ற வானத்துக்கதிரவன். நீ பசித்தலையும் பெருந்தீ.” மனதில் எழுந்த குரலுக்கு மாமன் யூசுன்னின் சாயலிருந்தது.

‘இஜினாசி!’ தோசுன் வந்து நின்றிருந்தான். அவனுக்குப்பின்னே இரும்பாலை அரவமடங்கி வெறுமையாகிக் கொண்டிருப்பது தெரிந்தது. தோசுன் உயிர்த்தது, பிறழ்மனம் சரியாகிப் பேசியதெல்லாம் அற்புதம் தான். அத்தோடு அவன் சொன்ன உண்மை…அவன் சொல்லும்வரை இஜினாசியே சுரோவைத் தவறாகத்தானே எண்ணியிருந்தான்? கடைசியில் அவன் எண்ணியது போலலல்லாமல்….

“இஜினாசி! கிளம்பட்டுமா?”

“ம்ம்…”

“வந்து…”

“என்ன?”

பெரிய மூச்சொன்றை எடுத்துவிட்டு துவங்கினான் தோசுன், “நீங்களும் இளையவர் சுரோவும் எவ்வளவு திறன்மிக்கவர்கள்? இருவரும் இணைந்திருந்தால் இந்தக் குயாவுக்குத்தான் எவ்வளவு பெருமை? குயாவின் பலமே நீங்கள் இருவரும் தான். அதனால் தான் எதிரிகள் உங்களை இணையவிடாமல் செய்கிறார்கள். அதை உணர்ந்து சுரோவின் அருமை புரிந்து..”

செம்பா

“போதும் போதும், உன் போதனைகளை நிறுத்து. பணி முடிந்ததல்லவா? கிளம்பு. ஒரு முறை ஊருக்கு உண்மை உரைத்ததாலேயே எனக்கு அறிவுரை சொல்லும் தகுதி உனக்கு வந்துவிட்டதாக எண்ணாதே, சரியா? திருட்டுப்பயல்! எல்லாம் இந்தச் சுரோ தந்த இடம். யாரிடம் எப்படிப்பேச வேண்டுமென்ற முறைமைகளெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன.” வெறுப்பாய் மொழிந்துவிட்டு மீண்டும் அவன் வான் பார்க்கவும் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான் தோசுன்.

`சுரோவின் அருமை புரியவேண்டுமாமே? ஏன் என் அருமை யாருக்கும் புரியவில்லை? அவன் நல்லவனாகவே இருக்கட்டுமே அதற்காக நான் எப்படிக் கெட்டவனாவேன்? அவனது செயல்களுக்கு முன் என் இயல்பு தாண்டி இவர்களுக்காக நான் வருந்திச்செய்யும் செயல்களெல்லாம் காணாமல் போவதை எவ்வளவு நாள் தான் சகித்துப்போவது?’

“இளைய தலைவர்.” இப்படி அழைக்க இந்த பியோன்ஹானிலேயே ஒருவர் தானுண்டு. சிரிப்போடு வந்த ஹிம்சானை முறைத்தபடி தோசுன் நகர்வது பின்புலத்தில் தெரிந்தது. ஹிம்சான் செய்த துரோகத்தை அறிந்தபோது சுரோவை விட அதிகமாக இஜினாசிக்குக் கோபம் வந்தது. ஹிம்சானை சிறையில் அடைப்பதில் எந்தத்தவறுமில்லை என்று முதல்முறையாக சுரோவுக்கு ஆதரவாக இஜினாசி அப்போது பேசினான். ஆனால் அதே சுரோ கொஞ்சகாலத்தில் ஹிம்சான் வெளியே வந்தபோது ஏதும் நடக்காதது போல சிரித்து வரவேற்றான். கேட்டால் மறப்போம் மன்னிப்போமென்று உளறல் வேறு. அன்றிலிருந்து இந்த ஆள் வேறு எப்போதும் பின்னோடு அலைகிறார். எரிச்சல் மிகுதியை வெளிப்படையாகவேக் காட்டினான் இஜினாசி.

“என்ன வேண்டும் உமக்கு? எப்போது பார்த்தாலும் என் பின்னோடு அலைகிறீர்? அந்த முட்டாள் சுரோவைப்போல அல்ல நான். உமது திருகு வேலையெல்லாம் வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் என்னிடம் வேண்டாம்.”

“சுரோவைப்போல நீங்கள் முட்டாள் அல்ல என்பதும் தெரியும், திருகு வேலைகள் உங்களிடம் வேலைக்கு ஆகாதென்றும் எனக்குத் தெரியும் இஜினாசி. ஆனால் நான் வந்தது நியாயமான ஒரு வழியை, ஒரு தலைவனுக்கான அனைத்துத் தகுதிகளும் முழுமையாகப் பொருந்திய உங்களைப் பதவி நோக்கி இட்டுச்செல்லும் வழியைச்சொல்லத்தான்.” இஜினாசி பேசாமல் இருக்கவும் மீசையைத்தடவிக்கொண்டு நெருங்கி அமர்ந்தார் இஜினாசி.

“உண்மை. குயாவின் தலைமைப்பொறுப்புக்குச் சுரோவை விடவும் தகுதி பொருந்தியவர் தாங்கள் தான். எப்படியென்று ஒரு சிறு உதாரணம் சொல்லட்டுமா?” அவன் பேசாமலிருக்கவும் அவரே தொடர்ந்தார்.

“சுரோவுக்குத் திருமணம் பேசுகிறார்கள்.” இரு நாட்களாய் அணைத்து வைத்திருந்த கனல் சட்டெனப்பற்றிக்கொண்டது அவனுக்குள்.

“அதை அவன் மறுத்துப்பேசிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்களே சொல்லுங்கள். அவன் மிக விரும்பும் மக்கள் அச்சத்திலிருக்கும்போது அந்த அச்சத்தைப் போக்கும் மருந்தும் அவனிடமே இருக்கும்போதும் அவன் அதை மறுப்பது எதைக்காட்டுகிறது?” யோசனையாய் இஜினாசி ஹிம்சானை நோக்கினான்.

செம்பா

“எல்லோரும் சொல்வது போல அவனொன்றும் அடுத்தவர்க்காக வாழ்கிறவனல்ல. தனக்காக மட்டுமே வாழ்கிறவன்.”

‘தனக்காக மட்டுமே வாழ்கிறவன். பாரபட்சமற்ற கதிரவனல்ல பசித்தலையும் தீ’ அவன் மனதில் எண்ணங்கள் வேகமாக எழுந்து நின்றன.

“இந்த உண்மையை ஊரறியச்செய்ய உங்களால் மட்டும் தான் முடியும். ஊர் அறியச்செய்வது மட்டுமில்லாமால் உண்மையிலேயே இந்தக்குயாவ் மக்களின் துயர் போக்கவும் இப்போது உங்களால் தான் முடியும். அத்தோடு இரட்டை வேடம் போடுவோர் முகத்திரையையும் கிழிக்க முடியும். நான் சொல்ல வருவது புரிகிறதா?”

“..”

“மழையின்மையால் வாடி அஞ்சும் மக்கள் விரும்புகிறபடி ஒரு திருமணத்தை நீங்கள் செய்து கொள்ளுங்கள் இஜினாசி.” இஜினாசிக்குள் பற்றிய நெருப்பு ஜ்வாலைகளாய்ப் பெருகி வளர்ந்தது.

“நான் மணந்துகொண்டால்?” எரிகின்ற தீயில் நெய்யிட்டுத் தன்புறம் திருப்பினார் ஹிம்சான்.

“மக்கள் மகிழ்வர். யார் என்ன நினைத்தாலும் நீங்களும் தலைவர் மகனென்று தான் ஊர் நினைக்கிறது.” ஊர் என்பதை ஹிம்சான் அழுத்திச்சொல்லவும் அதற்குமேல் முடியாமல் எழுந்து அமர்ந்தான் இஜினாசி.

“என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“சில திங்களாக நடக்கும் இந்தப்பேச்சில் இன்னும் நீங்கள் சேர்க்கப்படவில்லையே என்று வருந்துகிறேன் இஜினாசி. அந்த யிபிகா ம்ம்..மன்னியுங்கள் உங்கள் தந்தை உண்மையிலேயே உங்களைத் தன் மகனாக நினைத்திருந்தால் சுரோ திருமணம் செய்ய மறுத்த அடுத்த நொடி உங்களிடம் அதைக் கேட்டிருக்கலாமே? உங்கள் இருவரில் யாருக்கு மணம் நடந்தாலும் ஊருக்கு அது ஒன்று தானே? ஏன் கேட்கவில்லை? ஏனென்றால்..”

“வேண்டாம் எதுவும் சொல்லாதீர்கள். என் கோபத்துக்கு ஆளாகாமல் இங்கிருந்து கிளம்புங்கள்.” இஜினாசியின் மொத்த உடலும் மெல்லதிர்வுக்கு ஆளாகியிருப்பது கண்டு ஹிம்சானின் உள்ளம் துள்ளியது.

“எல்லா குணங்களும் நிரம்பிய உங்களை ஏன் வெறுத்து ஒதுக்குகிறார்கள் என்று புரிகிறதா? என்ன தான் பிள்ளை என்று பேசினாலும் நீங்கள் அவர் வயிற்றுதித்த..”

“போதுமென்றேன்..” கர்ஜனையில் மெல்லப்பின்வாங்கினார்.

“நிதானமாக சிந்தியுங்கள் இஜினாசி. உங்களை மணக்க அழகில் சிறந்த ஒருத்தி காத்திருக்கிறாள். அதுமட்டுமல்ல நான் ஒருவன் எப்போதுமே உங்கள் பக்கம் இருக்கிறேன். உங்கள் ஆதரவுக்கென்றே பெரும் தலையொன்றை வடக்கிலிருந்து அழைத்து வரவும் செய்திருக்கிறேன். சுரோவைவிட அதிகமான படைபலத்தைக்காட்டி நேரடியாக அவனையும் வீழ்த்தி, நல்ல குடிப்பெண்ணை மணமுடித்து மக்களையும் நீங்கள் உங்கள் பக்கம் சேர்க்கமுடியும். இது தான் உங்கள் கனவுகளுக்குச் சரியாக இருக்கும். யோசித்துச்சொல்லுங்கள். நாளை வந்து சந்திக்கிறேன். அந்தப் பெருந்தலையோடு” பொருள் பொதிந்த சிரிப்பொன்றை உதிர்த்தபடி ஹிம்சான் விலக, யிபிகாவின் மீதும் சுரோவின் மீதும் மீண்டும் வெடித்துக்கிளம்பிய வெறுப்பையும் சினத்தையும் மடைமாற்ற வழியின்றி வேகமூச்சுகளெடுத்துச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தான் இஜினாசி.

—————

யாருமறியாத் தனியறை, மதுரைப்பெருநகர்.

இங்கிருந்து தப்பவேண்டுமென்ற முடிவை ஏற்கனவே எடுத்திருந்தாள் செம்பா. அம்புவழிச்செய்தி அந்த முடிவை உறுதிப்படுத்த மட்டுமே செய்தது.

அவள் யாரை எப்படிச் சந்திக்கவேண்டுமென்று முடிவு செய்ய வேண்டியவள் அவளல்லவா! இப்படிச் சிறையில் இருந்தாவது அந்தப்பாண்டியனைச் சந்திக்க அவளுக்கு எந்த அவசரமும் இல்லையே!

அவளது திட்டத்தின் பேரில் அவளது வளையத்தில் அவனை நிற்க வைத்துப்பின் அவள் கேட்க நினைத்ததைக் கேட்பாள். அந்தத்துணிவும் செயல்தீரமும் அவளுக்குண்டு. இப்படிச் சிறையில் காத்திருந்து அவனைச்சந்திப்பது அவளது ஆய்குலப் பெருமைக்கே இழுக்கு. எண்ணங்கள் பலவாறாக தெறித்தோட கண்கள் சுவர்களை ஆராய்ந்தன.

அந்த அறையிலிருந்து வெளியேற கதவு தவிர்த்து ஒரே வழி தான் இருந்தது. அது மிக உயரத்திலிருந்த விட்டத்தைச் சுற்றியோடும் அந்த இடைவெளி. அதை உத்தேசித்தே சுவற்றில் ஒரு உயரத்துக்கு மேல் எந்தப்பிடிமானமும் வைத்திருக்கவில்லை. பிடிமானம் தான் இல்லை ஆனால் சுவரெங்கும் வேலைப்பாடென்ற பெயரில் மிகக்கூர்மையான வடிவங்கள். பிடித்து ஏறிவிடக்கூடாதில்லையா? சிரித்துக்கொண்டாள் செம்பா.

இதற்கெல்லாம் மயங்குகிறவளென்றெண்ணித்தான் இங்கே சிறை வைத்துவிட்டான் அந்தக் கிறுக்கன் பாண்டியன். சாமானியப்பெண்ணென்று நினைத்துவிட்டான் பாவம். அவள் சாமானியள் அல்ல ஆய்க்குடித்தோன்றல். எண்ணத்தில் மிடுக்கோடு சீலைகளை நெடுகக்கிழித்துச் சேர்த்து முனையில் அம்பைப் பிணைந்து விட்டத்துக்கம்பி நோக்கி எறிந்தாள். அம்பு கம்பியைக்கவ்விக்கொண்டதும் மீதச்சீலைகளைக்கிழித்துக் கை கால் முட்டிகளில் மெத்தென்று கட்டிக்கொண்டு சீலைக்கயிற்றைப்பற்றியபடி சுவற்றில் ஏறத்தொடங்கினாள்.

விளக்குகளால் ஒளிர்ந்த அறையை விட்டு இருள் குவிந்த அந்தச்சிறு இடைவெளி நோக்கி வேகமாக முன்னேறினாள் செம்பா. காரிருளில் கையில் பிள்ளையோடு நின்ற அன்னையின் வீரமுகம் நெஞ்சிலாடியது. செருக்கு நிரம்பிய சிரிப்பொன்று வெடித்துக்கிளம்பியது அவளினின்று.

குடிச்செருக்கு செம்பவளத்தின் சிந்தனையைக் குழப்பத்துவங்கிச் சில காலமாகியிருந்தது. சரியாகச்சொல்வதானால் அவளது அன்னை விட்டுச்சென்ற குலக்குறி மோதிரத்தை அவள் விரல் தீண்டிய வினாடி என்று சொல்லலாம்.

பிறரைப்போலல்ல அவள். அவளுக்குக் கடலே ஆசான். கடலே இயற்கையின் பெருந்தெய்வம். கடலை மிஞ்சி ஏதுமில்லை. துவக்கமுதலே மனிதக்கோட்பாடுகள் அவளை வெகுவாய்க் குழப்பின. ஆகையால் கடலிடமிருந்தே அவளது வாழ்வின் பொருண்மைகளை வகுத்துக்கொண்டிருந்தாள் அவள். செம்பவளத்தைப்பொருத்த மட்டில் யாவும் யாவருக்குமானது. குடி கோன்மை பேதமின்றி மாந்தரைப்பாவிக்கும் கடல் போல அவளுக்கும் யாரிடமும் எந்த வேறுபாடும் இருந்ததில்லை.

குடிச்செருக்கும் நிணச்செருக்கும் கொண்ட பெண்களிடம் தோழமை கொள்ளவும் தயங்கும் பெண் செம்பா. ஆனால் அவள் மாறிப்போயிருந்தாள். இப்போதெல்லாம் பொதுவான அவளது சிந்தனைகளில் கூட அவளது ஆய்குலப்பெருமையும் அது தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதால் உண்டான சீற்றமும் கலந்திருந்தன.

நிலை பிறழ்ந்து குழம்பித்திரிந்த இளமனம். இளமையின் வேகமும் அந்த வேகத்தோடிணைந்த குழப்பமும் செம்பவளத்தை அவளது இயல்பான ஓட்டத்திலிருந்து வெகு தூரம் இழுத்து வந்திருந்தது.

குழப்பங்கள் எப்போதும் தீமையை மட்டுமே விளைவிப்பதில்லை. காத்திருந்து பெருங்கலை நிகழ்த்தும் காலமும் குழப்பங்களைக்கொண்டு தான் பல அதிசயங்களை நிகழ்த்தி விடுகிறது. வரலாற்றின் பெருநிகழ்ச்சிகள் பலவும் குழப்பத்தின் விளைவாக நிகழ்ந்தவையே.

இதோ! கவணில் மாட்டிய கல் போல செம்பவளம் பின்னேறுவதிலும் காலம் ஒரு கணக்கு வைத்திருந்தது. மறந்திருந்த நெடுங்கனவொன்று நோக்கி செம்பவளமெனும் சிறுகல்லை வெகுவேகமாகச் செலுத்தவே காலத்தின் கரம் அவளைப்பின்னுக்கு இழுத்திருந்தது.

நெடுங்கடல் பல தாண்டி அவளுக்காவெக் காத்திருந்தது அந்த நெடுங்கனவு.

(தொடரும்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.