மனதில் நினைப்பதை வெளியில் சொல்லாமல், மனதுக்குள்ளேயே ஒளித்து வைத்து விடுவதால் வாழ்க்கை பறிபோன கதைகளும் உண்டு;வாழ்வில் தப்பித்த கதைகளும் உண்டு;தடம் மாறிய கதைகளும் உண்டு; சந்தோஷங்கள் நிரம்பிய கதைகளும் உண்டு. உள்ளத்தில் வடித்தவனைக் கைப் பிடிக்கும் பாக்கியம் பெரும்பாலான பெண்களுக்குக் கிடைப்பதில்லை, அதுபோலவே, மன மேடையில் மகாராணியாக்கி மகுடம் சூட்டி, உழைப்பிலும், உறக்கத்திலும் அந்த முகத்தையே இதயத்தில் எழுதி, அழகு பார்க்கும் ஆண்கள் பெரும்பாலானோரின் வாழ்வில், அது கனவாகவே போய் விடுவதுதான் வேதனை. இலவு காத்த கிளியாக எத்தனை ஆண்களும், பெண்களும் இவ்வுலகில் காலந்தள்ளுகிறார்கள் என்பதை நினைக்கையில் இதயம் கனக்கத்தான் செய்கிறது. இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், சாதிகளின் பெயரால் ஆணவக் கொலைகள் நடக்கும் ஒரு நாட்டை, ஜனநாயக நாடு என்று அழைப்பதே தவறோ?ஆணோ, பெண்ணோ, தனது மனதுக்குப் பிடித்தவர்களுடன் வாழ்வதல்லவோ ஒரு சுதந்திர நாட்டுக்கு உரிய தன்மையாக இருக்க முடியும்.
தொலைத் தொடர்பில், புகைப்படக் கலையில், பாதுகாப்புச் சாதனங்களில், அடுப்படி எந்திரங்களில் அசாத்திய சாதனைகளை நிகழ்த்திக் காட்டும் அகிலத்தால், அமைதியான வாழ்வுக்கு வழி வகுக்க முடியாது போவது வேடிக்கையே!
இரண்டாவது உலகப்போரின் உக்கிரங்களை உணர்ந்திருந்தும், ஈகோ மாறாமல் இன்னமும் நாடு பிடிக்கத் துடிப்பது கேவலமே. பொக்லைனின் அடியில் நொறுங்கும் கல்லாக, உக்ரைன் உருக்குலைந்து கிடப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?குழந்தைகளும், முதியோரும் வாழ்ந்த இடத்தை விட்டு வம்படியாய் துரத்தப்படுவதைப் பார்க்கும் நமக்கே வயிறு பற்றி எரிகிறதென்றால், அவர்களின் நிலை?இதற்கெல்லாம் விடிவு எப்போது?இலவு காத்த கிளியாக, எத்தனை மருத்துவ மாணவர்கள் இன்று சோம்பிப் போய்க் கிடக்கின்றனர். அவர்களின் எதிர்காலம், உக்ரைனின் எரிந்து கரி படிந்து கருத்துப் போய் இருண்டு கிடக்கும் கட்டிடங்களைப் போல, இருண்டல்லவா கிடக்கிறது. சினிமாவைப்பற்றிப் பேச வந்த நாம் நிகழ்காலச் செயல்களில் ஆழ்ந்து விட்டோமோ!அதுக்குக் காரணம் வேற ஒண்ணும் இல்லீங்க. இலவு காத்த கிளி என்ற மணியன் அவர்களின் கதைதான் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்ற திரைக் காவியமாக உருவெடுத்தது. நமது மருத்துவ மாணவர்களின் ஆசை நிராசையாகப் போய்விடக் கூடாது என்ற ஆதங்கம் காரணமாகவே நிகழ்காலம் உள்ளே நுழைந்து விட்டது.
சொல்லத்தான் நினைக்கிறேன் திரைப்படம் வெளியாகி, அடுத்த (2023)ஆண்டோடு, 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இயக்குனர் சிகரம் பாலச் சந்தர் ஒரு கை தேர்ந்த இன்டீரியர் டெகரேடர் போல. நல்ல அடித்தளம் கொண்ட வீட்டை எப்படி ஓர் இன்டீரியர் டெகரேடர் அழகான பங்களா ஆக்கி விடுவாரோ அதைப்போல, நல்ல கதை கிடைத்தால் அதைக் காவியமாக்கிக் காலத்தால் அழிக்க முடியாத ஓவியமாக்கி உலவ விடும் திறமை அவரிடம் நிறையவே இருந்தது. மணியன் என்ற மாபெரும் எழுத்தாளனின் மாளிகையை, அழகான அரண்மனை ஆக்கப் பாலச்சந்தருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்?
எவ்வளவு அருமையான பாத்திரப் படைப்புகள். மூன்று பெண்கள் தங்கள் கனவு நாயகனாக சிவகுமாரைப் போற்றினாலும், தன் பண்பிலிருந்து கொஞ்சமும் வழுவாமல் வாழும் அவரை என்னென்பது?கண்ணியம் தவறாத மானேஜராக உயர்ந்து நிற்கும் அவரை, ஆசிரியை, செஃப், அதாங்க சமையற்கட்டரசி மற்றும் கல்லூரி மாணவி ஆகிய மூன்று சகோதரிகளும் தங்கள் மனசுக்குள் வைத்து பூஜிக்க, அவர் மனமோ கல்லூரி மாணவியான ஜெயசித்ராவின் துடுக்கில் லயிக்க, இறுதியில் மாணவியோ தன் தோழி ஜெயசுதாவைக் கமலிடமிருந்து காப்பாற்றப்போக, தனி மரமாகும் சிவகுமார் பாத்திரம் பரிதாபத்திற்குரியதாகிப் போகிறது. மலருக்கு மலர் தாவும் வண்டாகக் கமல் ஆட்டம்போட, நிஜ வாழ்வில் அவரைப்போல் பல இளைஞர்கள் இருப்பதைக் கண்முன்னே கொண்டு வந்து விடுவர் கமலும், இயக்குனரும்.
‘வெளியே போங்கடா… முண்டங்களா’ என்ற பழம்பெரும் நடிகர் எஸ். வி. சுப்பையாவின் குரல் உங்கள் காதுகளில் இப்பொழுதும் ரீங்காரம் இடவில்லையென்றால், இன்னொரு முறை படத்தைப் பார்ப்பதே உத்தமம். இப்பொழுதுதான் சினிமா பார்ப்பது மிக எளிதாகி விட்டதே!
சிவகுமாரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப, சமையற்கட்டில் சிக்கியிருக்கும் ஶ்ரீவித்யா பாத்திரங்களை ‘ணங்…ணங்…’ என்று வைத்து ஒலியெழுப்புவதும், தன் தோழிக்கென்று கடிதங்களைக் கொடுத்து ஸ்டாம்ப் ஒட்டிப்போடச் சொல்வதும், இறுதியாகச் சிவகுமார் தனக்கில்லை என்று தெரிந்த பிறகு, ’பதிமூணு லெட்டர் கொடுத்தேனே…அதில ஒண்ணைக்கூடப் பிரிச்சிப் படிக்கலையா சார்!’ என்று வருத்தமுடன் வினவ, ’அதெப்படிங்க…நீங்க ஒங்க தோழிக்கு எழுதின கடிதத்தை நான் படிக்கிறது?’என்ற ராகவனைப் பார்த்து, ’ நீங்க உண்மையிலேயே ஜென்டில்மேன் சார்!’ என்று கூறும் வித்யாவின் வசனம், வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதது. நிஜ வாழ்விலும் சிவகுமார் ஜென்டில்மேன்தானே!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தாய் இல்லாத மூன்று பெண் குழந்தைகளுடன் ஒரு தந்தை படும் அவஸ்தையை அழகாகக் காட்டிடுவார் எஸ். வி. சுப்பையா. ஒவ்வொருவரும் தங்கள் காதலை சொல்ல நினைப்பதும், சொல்லாமல் விடுவதுமே கதையின் கரு. ஒரு சிறு கிராமத்தில் நுழைந்து, வேறுபட்ட மனிதர்களைச் சந்தித்தது போன்ற ஓர் உணர்வையே படம் தரும். நடைமுறை வாழ்வைத் தத்ரூபமாகத் திரையில் காட்டி, ரசிகர்களை வளைத்துப்போடும் வலிய நுணுக்கத்தைப் பாலச் சந்தர் அருமையாக அறிந்து வைத்திருந்தார்.
சரி… மாறுபட்ட தன் படங்களின் மூலம், ஒரு சமுதாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டுமென்பதே பாலச்சந்தர் போன்ற ஜாம்பவான்களின் கனவாக இருந்திருக்க வேண்டும். ரசிகர்களைக் கவர்ந்த அவருடைய பல படங்களாலும், எதிர் பார்த்த இலக்கை அடைய முடியவில்லையென்பதே நிதர்சனம். ஏனெனில் தமிழ்ச் சமுதாயம் பழம்பெருமை பேசி, சாதி, மத வேறுபாடுகளில் ஆழ்ந்து ஈடுபடுவதாலேயே நாம் இன்னும் அமைதிச் சமுதாயத்தை அமைப்பதில் பின்தங்கி நிற்கிறோம். கதைகளிலும், நாடகங்களிலும், சினிமாவிலும் காதலைப் போற்றுகின்ற நாம், சொந்த வாழ்வென்று வருகின்றபோது ஒதுங்கியே நிற்கிறோம். காதலை மட்டுமல்ல, தியாகத்தையும், விட்டுக்கொடுத்தலையும், இன்ன பிற நல்ல சங்கதிகளையும் உளமார ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறோம்.
ஒரு சினிமா எடுத்தல் என்பது சாதாரணமானதல்ல. இன்றைக்கு எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்து அது இலகுவாக்கப்பட்டிருக்கிறதே தவிர, அதில் ஈடுபடுகின்றவர்களின் உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. கதை, பாடல்கள், வசனம், பின்னணி இசை, ஒளிப்பதிவு, நடிகர்கள், விளம்பரம் என்று அது பெரிதாக நீண்டு கொண்டே போகும். கதை நடந்ததாகக் கூறும் காலகட்டத்தில் இருந்த உடை, ஊரின் நிலை என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டிய பொறுப்பு இயக்குனருக்கும், அவர் உதவியாளர்களுக்கும் மிக அதிகமாகவே உண்டு. சற்றுச் சறுக்கினாலும், இன்றைய சூழலில் நாட்டின் கடைக்கோடியில் உள்ள சாதாரண மனிதனும் வாட்ஸ் அப் பில் தவறைச் சுட்டிக்காட்டி, களேபரம் செய்வார். டீசர், பாடல்கள் வெளியீடு என்று படம் வருவதற்கு முன்பான பந்தாக்கள் இன்று அதிகமாகி விட்டன.
படம் வெளியானதும், தியேட்டர் வாசலில் ரசிகர்களைக் காமிரா சகிதம் சந்திப்போர், படம் நன்றாக இருந்ததா என்று கேட்கிறார்களே தவிர, படத்திலுள்ள நல்ல கருத்துக்களை வாழ்வில் கடைப்பிடிப்பீர்களா என்று கேட்பதில்லை. நல்ல படங்களின் உயரிய கருத்துக்கள் சமுதாயத்தில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப்பற்றிய விபரங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதைப்பற்றிய கவலையோ, அது போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமோ கூட, இது வரை சம்பந்தப்பட்ட துறையினருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. படம் எவ்வளவு நாட்கள் ஓடியது? நூறா, வெள்ளி விழாவா? வசூல் எப்படி? போன்ற விபரங்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன. படம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தே, அரசின் விருதுகள் வழங்கப்பட வேண்டுமென்பதைத்தான் நான் சொல்ல நினைக்கிறேன்! நினைப்பது மட்டுமல்ல…சொல்லியும் விட்டேன்.
இதை எழுதுகையில் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. கர்நாடகாவின் பழ வியாபாரி ஒருவர் பத்மஶ்ரீ பட்டம் வாங்கியுள்ளார். பழ வியாபாரிக்கு பத்மஶ்ரீ பட்டமா என்றுதானே திகைக்கிறீர்கள். அவர் செய்துள்ள செயலின் விபரம் அறிந்தால் ஆச்சரியத்துடன் சந்தோஷமும் படுவீர்கள். அவர் சாலையோரத்தில் பழம் விற்றுக் கொண்டிருந்தபோது, வெளிநாட்டினர் இருவர் வந்து பழத்தின் விலையைக் கேட்டுள்ளனர்-ஆங்கிலத்தில். கன்னட மொழியை மட்டுமே அறிந்த அவரால் அவர்களுக்குப் பழ விலையை ஆங்கிலத்தில் சொல்லி விற்க முடியவில்லை. அவர்கள் வாங்காமலே போய் விட்டனர். உடனே அவர் ஒரு முடிவுக்கு வந்தார். தன் ஊரில், இனி வரும் சமுதாயத்தினர் அனைவரும் ஆங்கிலம் அறிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று மனதிற்குள்ளாக சங்கல்பம் செய்து கொண்டார். பழம் விற்றுச் சேர்த்த பணத்தோடு, பல இடங்களிலும் அலைந்து திரிந்து நன்கொடை பெற்று உள்ளூரில் ஓர் ஆங்கில வழிக் கல்வி கற்றுத் தரும் பள்ளியை நிறுவினார். இன்றைக்கு 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவர் பள்ளியில் ஆங்கிலம் கற்று வருகிறார்கள். மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டமளித்து அவரைக் கௌரவித்துள்ளது. மனம் இருந்தால் நிச்சயமாக மார்க்கமுண்டு.
சொல்லத்தான் நினைக்கிறேன் படம் வெளியான பிறகு, காதலோ, பிறவோ… தங்கள் மனத்தில் சொல்லாமல் ஒளித்து வைத்திருந்ததைப் பலர் வாய்விட்டுச் சொல்லியிருப்பார்கள் என்றே நம்புகிறேன். The credit goes to K. B. இனியாவது எதையும் மனத்தின் ஆழத்தில் புதைத்து வைத்துத் தங்களுக்குள்ளாகவே குமைந்து கொண்டிருப்போர், அதனை உரியவர்களிடத்தில் சமாதான முறையில் சொல்லி ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டும். இலவு காத்த கிளியாக இங்கு இனியும் யாரும் சங்கடப்படக் கூடாது. ஐம்பதாண்டை நெருங்கும் பாலச்சந்தர் படத்துக்கு நாம் செலுத்தும் காணிக்கை அதுவாகத்தானே இருக்க முடியும்.
– ரெ. ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி