சென்னை: அமரர் ப.ஜீவானந்தம் தமிழகத்தில் பொதுவுடைமை இயக்க முன்னோடியாகவும் விடுதலைப்போராட்ட வீரருமாகத் திகழ்ந்தவர். ஜீவாவின் பேரனுக்கு அரசுத்துறையில் பணிநியமனம் வழங்கியமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், ”இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழார்ந்த தலைவர் பேராசான் ப.ஜீவானந்தத்தின் மகன் வழி பேரன் ம.ஜீவானந்தத்திற்கு நேற்று (14.03.2022) முதல்வர் மு.கஸ்டாலின் – தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் இளநிலை உதவியாளர் பணிநியமனம் வழங்கியுள்ளார்.
மாற்றுத் திறனாளியான ம.ஜீவானந்த் வாழ்க்கைக்கு இது பேருதவியாக அமையும்.நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரின் குடும்பத்திற்கு பணிநியமனம் வழங்கி ஆதரித்து முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.