சென்னை:
இந்தியாவில் பல்வேறு வயது பிரிவினருக்கு
கொரோனா தடுப்பூசி
போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது.
முதலில் சுகாதார பணியாளர்களுக்கும் பின்னர் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய் கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 45 வயதை தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 18 வயதை தாண்டிய இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள 60 வயதை கடந்தவர்களுக்கு 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு நாளை முதல் புதிய தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இந்த புதிய தடுப்பூசியின் பெயர் ‘கோர்பேவேக்ஸ்’. 12 வயது பூர்த்தியான சிறுவர்கள் இத்தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இத்திட்டம் நாளை முதல் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல 60 வயதை கடந்த அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியும் நாளை முதல் செலுத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு நாளை தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. இந்த வயது பிரிவில் சுமார் 31 லட்சம் பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-
12-14 வயதுடைய சிறுவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த வயது பிரிவில் 31 லட்சம் சிறுவர்கள் இருப்பதாக கணக்கெடுப்பின் மூலம் தெரிய வருகிறது. அவர்களுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
21 லட்சம் ‘கோர்பே வேக்ஸ்’ தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளன. தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை மூலம் அரசு, உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் மூலம் இந்த பணி விரைவுபடுத்தப்படும்.