டில்லி
தமிழக ஆளுநர் ஆர் என் ரவியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக உறுப்பினர் டி ஆர் பாலு மக்களவையில் கூறி உள்ளார்.
நடைபெற்று வரும் மக்களவை கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு கொண்டு வந்துள்ளார். அப்போது அவர் தனது உரையில், : தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு 7 மசோதாக்களுக்கு மேல் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அந்த மசோதாக்கள் அனைத்தையும் ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்துள்ளார். இதனால் இங்கு காட்டாட்சி நடக்கிறதா எனக் கேள்வி எழுகிறது. ஒரு அரசு நிர்வாகம் சட்டப்படிதான் நடக்க வேண்டும் மேலும் கூட்டுறவுச் சங்கம் தொடர்பான மசோதா, நீட் மசோதா உள்ளிட்ட அனைத்தையும் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் ரவியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இடையில் குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா இது மாநிலப் பிரச்சினை எனவும் மக்களவையில் பேசக்கூடாது எனவும் கூறி டி ஆர் பாலு தொடர்ந்து பேச அனுமதி மறுத்துள்ளார். இது திமுக உறுப்பினர்களுக்கு ஆவேசத்தை ஊட்டியது. இதையொட்டி அவர்கள் சட்டத்தை மதிக்காமல் செயல்படும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முழக்கம் இட்டுள்ளனர்.