சென்னை: தமிழுக்குத் தொண்டாற்றும் தகுதிசால் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்படி 21 அறிஞர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றி தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கும் தமிழ் அமைப்பிற்கும் திங்களிதழுக்கும் என மொத்தம் 21 விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
விருது பெற்றவர்கள் விவரம்:
தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும் 2022-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது – மறைந்த மு. மீனாட்சிசுந்தரம், 2021-ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத் , பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் குமரிஅனந்தன் , மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமார் , பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமன் , முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் ம. இராசேந்திரன் , கம்பர் விருது பாரதி பாஸ்கர் , சொல்லின் செல்வர் விருது சூர்யா சேவியர் , ஜி.யு.போப் விருது அ.சு. பன்னீர் செல்வன் , உமறுப்புலவர் விருது நா. மம்மது , இளங்கோவடிகள் விருது திரு. நெல்லை கண்ணன் , சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் , மறைமலையடிகளார் விருது சுகி. சிவம் , அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா.சஞ்சீவிராயர் , அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான.அலாய்சியஸ் , 2020 ஆம் ஆண்டிற்கான முதல்வரின் கணினித் தமிழ் விருது முனைவர் வ.தனலட்சுமி ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாக 2021-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது க. திருநாவுக்கரசு , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வழங்கப்படும் 2021-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது நீதியரசர் சந்துரு ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வாயிலாக வழங்கப்படும் தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு.அரசேந்திரனுக்கு வழங்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும் இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கி பொன்னாடை அணிவித்தும் சிறப்புச் செய்யப்பட்டது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையால் வழங்கப்படும் தந்தை பெரியார் விருதினை பெறுபவருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வழங்கப்படும் டாக்டர் அம்பேத்கர் விருதினைப் பெறுபவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
மேலும், 2021-ம் ஆண்டிற்கான தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கி விருதுத் தொகையான இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடையும் 2021-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் வழங்கி ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடை முதலியன வழங்கப்பட்டன.
இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.