அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (46). அந்தப் பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்தார். செந்திலின் சகோதரர் மகளான வினிதாவும் (22) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), பந்தல்குடி லிங்காபுரத்தைச் சேர்ந்த பெத்துக்குமார் (27) என்பவரும் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், வினிதா காதலனைப் பிரிந்து வீரசோழன் ஊரைச் சேர்ந்த பாண்டி என்பவரைத் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த கையோடு அனிதாவின் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில், வீரசோழனில் உறவினர்கள் பாதுகாப்பில் இருந்த வினிதாவுக்கு, திருமணத்துக்கு பின்பும் பெத்துக்குமார் தொடர்ந்து செல்போனில் தொல்லைகொடுத்து வந்துள்ளார். இதுபற்றி உறவினர்களிடம் சொன்னால் பெரிய பிரச்னையாகிவிடுமோ என பயந்த வினிதா, யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு சமாளித்து வந்துள்ளார். இந்த சூழலில், வெளிநாட்டிலிருந்து அனிதாவின் கணவர் திரும்பி வந்தபின்னும், நாளுக்கு நாள் பெத்துக்குமாரின் தொல்லை அதிகமாகியுள்ளது. இதை, பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் கணவரிடம் வினிதா விஷயத்தைக் கூறியுள்ளார்.
இந்த பிரச்னையை காதும், காதும் வைத்தாற் போல் முடிக்க எண்ணிய வினிதாவின் கணவர், வினிதாவின் சித்தப்பா செந்திலை தொடர்புகொண்டு தன் மனைவிக்கு இருக்கும் பிரச்னையை கூறியுள்ளார். அவரும், `பெத்துக்குமாரை நான் சத்தம் போட்டு வைக்கிறேன். நீங்க எதும் சங்கடப்படாதீங்க மாப்பிள்ள” என நம்பிக்கையூட்டி பேசியதாகச் சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பெத்துக்குமாரின் வீட்டுக்கு தன் மோட்டார்சைக்கிளில் சென்ற செந்தில், அவரை குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திட்டியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த பெத்துக்குமார், தன்னை அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் அசிங்கப்படுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் தகராறு ஏற்படவும், அப்போது அங்கிருந்த பெத்துக்குமாரின் தாய் விஜயலெட்சுமி, தம்பி விஜயகுமார், பெத்துக்குமாரின் நண்பர்களான ராஜபாண்டி, கோபிநாத், பாண்டியராஜ் ஆகிய 6 பேரும் சேர்ந்து செந்திலை கடுமையாக தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த செந்தில், காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக கூறி அங்கிருந்து தனது மோட்டார்சைக்கிளில் கிளம்பியுள்ளார். அவரை தடுத்து நிறுத்துவதற்காக, பெத்துக்குமார், அவர் தாய் உட்பட 6 பேரும் வீட்டிலிருந்த காரை எடுத்துக்கொண்டு பின்தொடர்ந்துள்ளனர். பந்தல்குடி அருகே உள்ள கொப்புசித்தம்பட்டி விலக்கு வந்தபோது முன்னே சென்ற செந்திலை மோட்டார்சைக்கிளோடு சேர்த்து காரால் இடித்து கீழே தள்ளியுள்ளார் பெத்துக்குமார். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த செந்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர், செந்திலை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செந்தில் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து செந்திலின் மகன் சூர்யா (21) கொடுத்த புகாரின் அடிப்படையில் பந்தல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து பெத்துக்குமார், அவரின் தாய் விஜயலட்சுமி உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனையின் போது, பெத்துக்குமாருக்கும், விஜயலட்சுமிக்கும் உடலில் காயங்கள் இருந்ததால் அவர்கள் இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விஜயகுமார், ராஜபாண்டி, கோபிநாத், பாண்டியராஜ் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர்.