வாஷிங்டன்:அமெரிக்காவில், 3 வயது குழந்தை துப்பாக்கியை வைத்து விளையாடியபோது, எதிர்பாராமல் வெடித்ததில், குண்டு பாய்ந்து தாய் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரில் வசிப்பவர் டீஜா பென்னட், 22. சமீபத்தில் ‘ஷாப்பிங்’ முடித்து விட்டு தன், 3 வயது மகனை காரின் பின் இருக்கையில் உட்கார வைத்து விட்டு, காரை ஓட்ட தயாரானார்.இருக்கையில் இருந்த தன் தந்தையின் துப்பாக்கியை எடுத்து, அந்த குழந்தை விளையாடியது.
அப்போது தவறுதலாக ட்ரிக்கரை அழுத்தியதால் துப்பாக்கி வெடித்தது. டிரைவர் சீட்டில் இருந்த டீஜா மீது குண்டு பாய்ந்தது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் டீஜாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, டீஜாவின் கணவர் ரோமல் வாட்சன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். சட்டவிரோதமாகவும், பாதுகாப்பற்ற முறையிலும் துப்பாக்கியை காரில் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2015ம் ஆண்டில் இருந்து 2021 வரை 2,070 சம்பவங்களில் குழந்தைகள் துப்பாக்கியை வைத்து விளையாடியதில், அது வெடித்துள்ளது. இவற்றில் பல குழந்தைகள் உட்பட, 765 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement