கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பனிஹாட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு உறுப்பினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனுபம் தத்தா(48). நேற்று முன்தினம் மாலை தனது உறவினருடன் அனுபம் இருசக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிய உறவினர் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த வழியாக வந்த ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து பின்னால் அமர்ந்திருந்த அனுபம் தத்தாவின் தலையில் சுட்டார். குண்டுபாய்ந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து விழுந்தார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இதன் அடிப்படையில் துப்பாக்கியால் சுட்ட சம்புநாத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.