புதுடெல்லி: ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்த்து அத்வானி கண்ணீர் விடுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று குற்றம்சாட்டினார்.
இந்தநிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இந்த படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாகக் கூறி வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ உண்மையில் பழையது. அது உண்மையில்லை என தெரிய வந்துள்ளது.
இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளவர்கள் ‘‘காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதை விவரிக்கும் ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்து, மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானி அழுதார்’’ என இந்தியில் வாசங்களுடன் ஷேர் செய்துள்ளனர்.
Lal Krishna Advani ji had himself reached the cinema hall to watch “The Kashmir Files” even at this age, probably could not stop himself and cried.#TheKashmirFiles@LKAdvaniBJP_@jaypanicker @jineesh_blr pic.twitter.com/ch5hebZZZi
— Vishnu Suresh Babu (@VishnuSureshBa3) March 13, 2022
இந்த வீடியோவில் அத்வானி ஒரு தியேட்டரில் அமர்ந்து கண்ணீரை அடக்கிக் கொண்டு இருப்பதையும் பின்னணியில் கேசரி படத்தின் தெறி மிட்டி பாடல் ஒலிக்கிறது. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
ஆனால் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை அத்வானி பார்ப்பதாக காட்டும் வீடியோ உண்மையல்ல. வீடியோ உண்மையில் சமீபத்தியது அல்ல, பிப்ரவரி 2020 இல் பதிவு செய்யப்பட்டது.
ஷிகாரா: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் காஷ்மீரி பண்டிட்ஸ் திரைப்படம் சிறப்புத் திரையிடலில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்டபோது எடுத்தது. திரைப்படத் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
சோப்ரா இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்,
அதில் “அத்வானி #Shikara சிறப்புத் திரையிடலில். உங்கள் ஆசீர்வாதம் மற்றும் உங்கள் பாராட்டுக்களுக்கும் நாங்கள் மிகவும் பணிவுடன் நன்றி தெரிவிக்கிறோம்’’ என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் சோப்ராஅத்வானிக்கு ஆறுதல் கூறுவதை வீடியோவில் காண முடிகிறது.