தென்காசியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துவந்தனர். இந்த நிலையில், தென்காசி நகரத்தில் உள்ள சிலரை அரிவாளைக் காட்டி அந்த ரௌடி மிரட்டியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
ஆனாலும் அவர் எங்கு பதுங்கியுள்ளார். என்பது மர்மமாக இருந்தது. போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் சாகுல் ஹமீது யாருக்கும் தெரியாமல் அங்குள்ள பச்சநாயக்கன் பொத்தை பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் உள்ள குளம், அதைச் சுற்றிலும் உள்ள மரங்கள், புதர்கள் சூழ்ந்த பகுதி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்பதால், யாருக்கும் தெரியாமல் அங்கு பதுங்கியிருந்துள்ளார்.
குளத்துக்குள் தண்ணீர் இருப்பதாலும் அதைக் கடந்து சென்று பொத்தையில் பதுங்கியிருந்ததாலும் சாகுல் ஹமீதைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அந்தக் குளத்துக்குக் குளிக்கச் செல்லும் பொதுமக்களையும் சாகுல் ஹமீது அரிவாளைக் காட்டி மிரட்டி விரட்டியடித்துள்ளார். அது பற்றிய தகவல் அறிந்த போலீஸார் அவரைப் பிடிக்கத் திட்டமிட்டனர்.
அதனால், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஏற்பாட்டில் துணை கண்காணிப்பாளர் மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் பொதுமக்களை மிரட்டும் ரௌடி சாகுல் ஹமீதைப் பிடிக்க டிரோன் கேமராவைப் பயன்படுத்த முடிவு செய்தனர்.
அதன்படி, பச்சநாயக்கன் குளம், பொத்தை பகுதிகளில் டிரோனை பறக்க விட்டனர். அப்போது அங்குள்ள புதர்களுக்குள் அரிவாளுடன் சாகுல் ஹமீது பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குளத்துக்குள் இறங்கிய போலீஸார் துப்பாக்கி முனையில் குற்றவாளியைச் சுற்றி வளைத்தனர்.
போலீஸாரைப் பார்த்ததும் அரிவாளைக் காட்டி மிரட்டி தப்பிச் செல்ல முயன்ற ரௌடி சாகுல் ஹமீதை போலீஸார் கைது செய்து தண்ணீருக்குள் இருந்து வெளியே அழைத்து வந்தார்கள். பிடிபட்ட குற்றவாளியிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா சூட்டிங் போல நடந்த இந்தச் சம்பவத்தை பொதுமக்கள் ஆச்ரியத்துடன் பார்த்தார்கள்.