5 மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை ஆம் ஆத்மி கட்சியிடம் பறிகொடுத்தது. உத்தரக்காண்ட், கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக நிரூபிக்கமுடியாமல் தோல்வியடைந்துள்ளது.
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபோது, 9 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இன்றைக்கு 2 மாநிலங்களில் மட்டும் ஆட்சியில் இருக்கிறது. இப்படி, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கையும் சுருங்கியுள்ளது.
5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கத் தவறியதுதான் என்று விமர்சனங்கள் எழுந்தன. மேலும், காங்கிரஸின் தோல்விக்கு நேரு குடும்பத்தினர் பொறுப்பேற்க வேண்டும், அவர்கள் காங்கிரஸ் தலைமையைவிட்டு விலக வேண்டும் என்ற விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்தன.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான, முரசொலி தலையங்கத்தில், 5 மாநிலத் தேர்தல் தோல்விக்கு காரணம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தவறிவிட்டதாக மென்மையாக குற்றம் சாட்டியது. அதே நேரத்தில், மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மிகவும் அவசியம் என்று முரசொலி தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.
முரசொலி தலையங்கம், தேர்தல் முடிவுகளில் திமுகவுக்கு ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லை என்றும், பாஜக தான் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் ஆட்சியை தக்கவைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
பாஜக பஞ்சாபில், இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், பாஜகவின் முயற்சிகளுக்கு வாக்காளர்கள் செவிசாய்க்கவில்லை என்று முரசொலி தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை விட பாஜக குறைவான இடங்களைப் பெற்றுள்ளதை குறிப்பிட்டுள்ளது.
பாஜகவின் வாக்கு சதவீதம் வெறும் 2 சதவீதம் அதிகரித்தாலும், சமாஜ்வாதி கட்சியின் வாக்கு சதவீதம் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
தேர்தலுக்கு முன் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கைகோர்த்திருந்தால், பாஜகவால் ஆட்சியை தக்கவைத்திருக்க முடியாது என்றும் முரசொலி தலையங்க சுட்டிக்காட்டியுள்ளது.
பாஜகவின் வெற்றிக்கு அதன் மதவாத பிளவு அரசியலே காரணம் என்று தலையங்கம் கூறியது. காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் அறிக்கையை மேற்கோள் காட்டி, பாஜகவுடன் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கத் தயார் என்று கூறியதைக் குறிப்பிட்டு, ஆனால், காங்கிரஸ் அப்படி செய்ய வில்லை என்று முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
இருப்பினும், திமுக தனது நீண்ட கால கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவை திமுக உறுதி செய்துள்ளது. மூன்றாவது அணிக்கு திமுக ஆதரவு அளிக்காது என்பதை அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும், டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத் திறப்பு விழாவுக்கு தேசியத் தலைவர்களை அழைத்து பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க திமுக தலைமை முயற்சி செய்யும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, பல்வேறு தரப்பில் இருந்தும் காங்கிரஸ் கட்சி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், கூட்டணி கட்சியான திமுக, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க நண்பேண்டா என்று திமுக காங்கிரஸுக்கு தனது ஆதரவை உறுதி செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“