புதுடெல்லி: ‘நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்’ என ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உலக முழுவதும் பல்வேறு அலை கொரோனா தொற்றால்,லட்சக்கணக்கான உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி மட்டுமே இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதால் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரியில் சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது. அதன் பின் பிப்ரவரி 2ம் தேதி முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 60 வயது மற்றும் இணை நோயுள்ள 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடங்கியது. பின்னர் கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்தது. தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி 15 வயது முதல் 18 வயது வரையிலானவர்களும் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதுவரை 180.9 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 வயது முதல் 14 வயது வரையிலான பிரிவினரும் தடுப்பூசி போடும் வகையில் தடுப்பூசி பாதுகாப்பு இயக்கத்தை ஒன்றிய அரசு விரிவுபடுத்தியுள்ளது. நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு 12 முதல் 15வயது வரையிலான பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதற்கு பரிந்துரை செய்துள்ளது. நாளை முதல் 12 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகின்றது என ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சர் மாண்டவியா தனது டிவிட்டர் பதிவில், ‘‘சிறுவர்கள் பாதுகாப்பாக இருந்தால் நாடு பாதுகாப்பாக இருக்கும். 12 முதல் 13 மற்றும் 13 முதல் 14வயது பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகின்றது என்று கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இனி பூஸ்டர் தடுப்பூசியை பெற முடியும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.* புதிய தடுப்பூசி செலுத்தப்படும்12-14 வயது சிறுவர்களுக்கு ஐதராபாத்தின் பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போது வரை நாட்டில் கோவாக்சின், கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய 3 தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த 3 தடுப்பூசிகளை பல கோடி மக்கள் செலுத்திக் கொண்டதில், பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி தந்தது. இது முதல் முறையாக நேரடியாக சிறுவர்களுக்கு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 2008,2009 மற்றும் 2010ம் ஆண்டில் பிறந்தவர்கள் 12-14 வயதுப்பிரிவில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.* 2500 ஆக சரிந்ததுநாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 2503 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,93,494 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்த 27 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு மே 3ம் தேதி 2487 பேருக்கு புதிய தொற்று பாதிப்பு பதிவானது. அதன் பின்னர் சுமார் 680 நாட்களுக்கு பின் மிக குறைவாக புதிய தொற்று பாதிப்பு நேற்று பதிவானது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் தற்போது 36,168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.