சென்னை:
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக உள்ளது. இதனால் தமிழக கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நீட் தேர்விற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஜனாதிபதி நிராகரித்தார்.
இதன் காரணமாக ஏழை, ஏளிய மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.
இதன் காரணமாக தமிழக அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ படிப்பில் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது. இருந்த போதும் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவிக்கு வந்ததும் சட்டசபையில் மீண்டும் நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்றி தமிழக கவர்னக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவின் மீது விளக்கம் கேட்டு கவர்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பிவைத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில் மீண்டும் சட்டசபை கூட்டத்தை கூட்டி நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபை கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தீர்மானம் நிறைவேற்றி ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இதுவரை இந்த மசோதா மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.
இதற்கிடையே தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்று சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. அதன் பிறகு அவர் சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மதியம் சந்தித்தார். அப்போது நீட் தேர்வு மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க வலியுறுத்தியதாக தெரிகிறது.