பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, 92 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. முதல்வராக பகவந்த் மான் நாளை பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்.
கடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலம் சங்ரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆக பொறுப்பேற்ற பகவந்த் மான், தற்போது பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தூரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நாளை முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பகவந்த் மான், சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில், பகவந்த் மானின் எம்பி பதவிக்கான ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சங்ரூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பகவந்த் மானிடம் இருந்து ராஜினாமா செய்வதற்கான கோரிக்கை எனக்கு வந்தது. மார்ச் 14-ம் தேதி முதல் அவரது ராஜினாமாவை நான் ஏற்றுக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
மந்திரிகளின் தனி உதவியாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் ஏன்? கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி