பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில்
ஆம் ஆத்மி
கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து ஹரியானாவைச் சேர்ந்த
காங்கிரஸ்
,
பாஜக
தலைவர்கள் பலரும் அந்தக் கட்சிக்குத் தாவ ஆரம்பித்துள்ளனராம்.
வலுவாக எது கிடைக்கிறதோ அந்தப் பக்கம் தாவுவதுதான் இந்தக் காலத்து அரசியலின் முதல் விதியே. அந்த விதியை எந்த மதியாலும் மாற்ற முடியாது என்பதால், ஹரியானாவில் இப்போது கட்சி தாவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பொதுவாக காங்கிரஸ் ஜெயிக்கும் இல்லாவிட்டால் அகாலிதளம் ஜெயிக்கும். ஆனால் எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாக இந்த முறை ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று அனைவரையும் அசர வைத்து விட்டது.
விடுவார்களா நம்ம “ஜம்ப்”லிங்கங்கள்.. காங்கிரஸ் மற்றும் பாஜகவிலிருந்து பலரும் ஆம் ஆத்மி பக்கம் தாவிக் கொண்டிருக்கிறார்களாம். குறிப்பாக ஹரியானாவைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் ஆம் ஆத்மியில் இணைந்து கொண்டிருக்கிறார்களாம்.
குருகிராம் பாஜக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான பிஜேந்திர சிங் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். இவர் கட்சி தாவுவது முதல் முறை இல்லை என்று உள்ளூர் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
அதேபோல ஹரியானா முன்னாள் அமைச்சரும், இந்திய தேசிய லோக்தளம் தலைவருமான பல்பீர் சிங்கும் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். அதேபோல முன்னாள் எம்எல்ஏ சமல்கா, காங்கிரஸ் தலைவர்கள் ரவீந்தர குமார், ஜகத் சிங், பகுஜன் சமாஜ் கட்சியின் அசோக் மிட்டல், பாஜகவின் அமந்தீப் சிங் வரியாச், பாஜகவின் குரியார் உள்ளிட்டோரும் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளனர்.
டெல்லி அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின், ராஜ்யசபா எம்.பிக்கள் சுசில் குப்தா, என்.டி. குப்தா ஆகியோரது முன்னிலையில் இவர்கள் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளனர்.
வழக்கமாக பாஜக அல்லது காங்கிரஸுக்குத்தான் பிற கட்சிகளிலிருந்து தாவி வருவார்கள். ஆனால் இந்தக் கட்சிகளிலிருந்து பெருமளவிலான தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு தாவுவது பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. இந்த தாவல்கள் குறித்து ஆம் ஆத்மியின் சுசில் குப்தா கூறுகையில், பஞ்சாப் மாநிலத்தில் கிடைத்த வெற்றி வளர்ச்சிக்கான வெற்றியாகும். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட வெற்றியாகும். ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. மிகப் பெரும் வெற்றியை எதிர்காலத்தில் நாங்கள் பெறுவோம்.
டெல்லி, பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து ஹரியானாவிலும் விரைவில் தேர்தல் நடைபெறும். அங்கும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். இந்த மாற்றம் பின்னர் நாடு முழுவதும் பரவும் என்றார் அவர். இதற்கிடையே, தென் மாநிலங்களிலும் தனது வலிமையை அதிகரிக்க ஆம் ஆத்மி கட்சி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.