கோவில்பட்டி: 2020-2021-ல் பிரீமியம் தொகை செலுத்திய விவசாயிகளுக்கு, அனைத்து பயிர்களுக்கும் பாகுபாடின்றி பயிர்க்காப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
பயிர் காப்பீடு செய்த அனைத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பாகுபாடின்றி அனைத்து பயிர் வகைகளும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்; 2020-21-ம் ஆண்டில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மக்காச்சோளம், உளுந்து, பாசி போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கும் உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வேளாண் துணை இயக்குநர் நாச்சியார், வேளாண் உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு) மார்டின் ராணி, கோட்டாட்சியர் சங்கரநாராயணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், 2020-21-ம் ஆண்டு ராபி பருவத்துக்கு நிலுவையில் உள்ள பயிர்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பெற்று வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.அழகுமுத்து பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.நல்லையா ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர்கள் வ.பாலமுருகன், சி.அழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓட்டப்பிடாரம் தாலுகா செயலாளர் ஏ.அசோக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர்கள் ஏ.லெனின் குமார், வி.கிருஷ்ணமூர்த்தி, தாலுகா தலைவர்கள் ஆர்.சிவராமன், பி.கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன், தாலுகா செயலாளர் ஏ.வேலாயுதம், எட்டயபுரம் பால்பண்ணை தலைவர் ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோட்டாட்சியர் அலுவலக வளாக பகுதியில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.