சென்னை: பள்ளிகளில் தொழில்நுட்ப தர மேம்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், காக்னிசன்ட் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித் துறைபுரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜீவா பேரனுக்கு அரசுப் பணி
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், விடுதலைப் போராட்ட வீரரும்,பொதுவுடைமை சிந்தனையாளருமான ஜீவானந்தத்தின் (ஜீவா) பேரனான, மாற்றுத் திறனாளி ம.ஜீவானந்துக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 95 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கும் வகையில், 4 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
அரசுப் பள்ளிகளில் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொழில்நுட்பக் கற்றல் வளங்களை பள்ளிகளில் எளிய வகையில் உருவாக்கவும், தொழில்நுட்ப மற்றும் கணினிமயமான பள்ளிகளில் ஆசிரியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும், தமிழக பள்ளிக்கல்வித் துறை, காக்னிசன்ட் நிறுவனம் இணைந்து, பள்ளிகளில் தொழில்நுட்பத் தர மேம்பாட்டுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், கணினிமயக் கற்றல் மேம்பாட்டு திட்டத்தின் அறிவுசார் பங்குதாரராக காக்னிசன்ட் நிறுவனம் செயல்படும்.
நூல்கள் வெளியீடு
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதி, தெலுங்கில் பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் மொழிபெயர்த்த திருக்குறள் உரை, எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதி,தெலுங்கில் கவுரி கிருபானந்தன் மொழிபெயர்த்த ‘ஒரு புளியமரத்தின் கதை’ ஆகிய நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இவை திசைதோறும் திராவிடம் என்ற திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் 7, 8-வது நூல்கள் ஆகும்.
வண்ணத் தொலைக்காட்சி பெட்டி
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள மாணவர்களின் கல்வி, கரோனா பரவல் சூழலால் பாதிக்கப்பட்டது. அரசின் கல்வித்தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் நேரடி வகுப்புகளால் பயனடைவதும் அவர்களுக்கு சிரமமாக இருந்தது. இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மறுவாழ்வு முகாம்களிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 55 அல்லது 43 அங்குல வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் நிறுவுமாறு ரோட்டரி இன்டர்நேஷனல் சங்கத்திடம் கோரப்பட்டது.
இதை ஏற்று ரூ.43.60 லட்சம் செலவில் 109 வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை ரோட்டரி இன்டர்நேஷனல் சங்கம் இலவசமாக வழங்கியுள்ளது. ஒவ்வொரு மறுவாழ்வு முகாம்களிலும் மாநில நேரக் கல்வி மைய அறைகளில் இவை பொருத்தப்படுகிறது. இத்திட்டத்தையும் முதல்வர் தொடங்கிவைத்து, 3 பயனாளிகளுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கினார்.
ரூ.23 கோடியில் வசதிகள்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ரூ.23.11 கோடியில் கட்டமைப்பு வசதிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
92 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.50.09 கோடியில் உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள அடிக்கல் நாட்டினார்.
ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை
பால்வளத் துறை சார்பில் மதுரை பால் பண்ணை வளாகத்தில் ரூ.65.89 கோடி செலவில் தினமும் 30 ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆவின் நிறுவனத்தின் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவசங்கர், பழனிவேல் தியாகராஜன், சா.மு.நாசர், பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, தலைமைச்செயலர் இறையன்பு, பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா,பொதுத் துறை செயலர் டி.ஜெகந்நாதன், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், பாடநூல் கழக மேலாண்இயக்குநர் டி.மணிகண்டன், பால்வளத்துறை செயலர் தென்காசிஜவகர், பிற்படுத்தப்பட்டோர் துறைசெயலர் ஆ.கார்த்திக், பால் உற்பத்தி ஆணையர் கோ.பிரகாஷ், ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், அயலக தமிழர் நலன் ஆணையர் ஜெஸிந்தா லாசரஸ், காக்னிசன்ட் நிறுவன அரசு விவகாரங்கள் தலைவர் கே.புருஷோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.