கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அத்துடன், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மாணவிகளின் தாக்கல் செய்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று கர்நாடக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹிஜாப்புக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாகியது.
அதேசமயம், ,
ஹிஜாப் வழக்கு
தொடர்பாக இடைக்கால உத்தரவு ஒன்றை கர்நாடக
உயர் நீதிமன்றம்
பிறப்பித்தது. ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
ஹிஜாப் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில், அதன் மீதான தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. இதையொட்டி, கர்நாடக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பெங்களூருவில் வருகிற 21ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 பேருக்கு மேல் கூடுவதற்கோ, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கோ அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துகள் தொடர்பாகவும் கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹிஜாப் விவகார வழக்கில் தீர்ப்பு வெளியான பின்பு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் போலீசார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.