புதுடில்லி: பாகிஸ்தானில் தவறுதலாக இந்திய ஏவுகணை விழுந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.
ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் இருந்து ஏவுகணை ஒன்று சமீபத்தில் பாகிஸ்தான் நிலப்பரப்பில் தவறுதலாக விழுந்தது. இது தொடா்பாக விசாரணை நடத்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாக்., கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது: இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்றது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும்.
ஏவுகணை அமைப்பு மிகவும் நம்பகமானது, பாதுகாப்பானது என்பதை நான் இந்த சபைக்கு உறுதியளிக்கிறேன். பாதுகாப்பு நடைமுறைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. நமது ஆயுதப் படையினர் நன்கு பயிற்சி பெற்றவர்கள், ஒழுக்கமானவர்கள். அத்தகைய அமைப்புகளை கையாள்வதில் நன்கு அனுபவம் பெற்றவர்கள். ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது பின்னர்தான் தெரிந்தது. எனினும் இச்சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டதுடன் உயர்மட்ட விசாரணைக்கு அதிகாரப்பூர்வ உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.
Advertisement