புதுடெல்லி:
தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதில் போதிய இட வசதியும் இல்லை. எனவே புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது.
தற்போதைய கட்டிடத்திற்கு அருகிலேயே புதிய கட்டிடம் எழுப்பப்படுகிறது. புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி அடிக்கல் நாட்டினார். பூமி பூஜையையும் அவர் தொடங்கி வைத்தார்.
64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.971 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பாராளுமன்ற மக்களவையில் 888 இருக்கைகள் வசதிகளும், மேல்சபையில் 384 இருக்கை வசதிகளும் அமைக்கப்படுகின்றன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
கட்டுமான பணிகளை வருகிற அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு பாராளுமன்ற மேல் சபையில் தெரிவித்தது. இதுதொடர்பாக மேல் சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்கள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை மந்திரி கவுசல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:-
டெல்லி விஜய்சவுக்கில் இருந்து இந்தியா கேட் வரை ராஜபாதையுடன் சென்டிரல் விஸ்டா தளம் ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்காக இதுவரை ரூ.418.70 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டத்தை வருகிற மே மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் பாராளுமன்ற கட்டிட கட்டுமான பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடம், சென்டிரல் விஸ்டா புனரமைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு திட்டமிடப்பட்ட செலவு 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.