புதுடில்லி:முப்படைகளின் தலைமை தளபதி, மறைந்த பிபின் ராவத் நினைவாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி படிப்புக்கான இருக்கையை, ராணுவ தளபதி எம்.எம்.நரவானே அறிவித்தார்.
முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த ஜெனரல் பிபின் ராவத், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், குன்னுாரில் கடந்த ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இன்று, அவரது 65வது பிறந்த நாள். இதையொட்டி, அவரது நினைவாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி படிப்புக்கான இருக்கை அறிவிக்கப்பட்டது.
டில்லியில், ராணுவ படிப்புகளுக்கான யு.எஸ்.ஐ., எனப்படும், இந்திய ஐக்கிய சேவை நிறுவனத்தில், இந்த ஆராய்ச்சி படிப்புக்கான இருக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே அறிவித்தார்.
இதற்காக, யு.எஸ்.ஐ.,யின் இயக்குனர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பி.கே.சர்மாவிடம், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நரவானே ஒப்படைத்தார். ‘ராணுவத்தில் கூட்டு நடவடிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு, இந்த இருக்கையில் இருந்து உதவித்தொகை வழங்கப்படும்’ எனக் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement