இலங்கைக்கு எதிரானப் போட்டியில், விஜய் ரசிகர்கள் இந்திய பவுலர் முகமது ஷமியிடம் ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்ட நிலையில், தற்போது பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய இயக்குநர் நெல்சனிடம், லோகேஷ் கனகராஜ் ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனி முத்திரை பதித்தவர் நெல்சன் திலீப்குமார். இவர் தற்போது முன்னணி நடிகரான விஜயை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரோட்க்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இவர் இசையமைத்திருந்த அரபிக் குத்து பாடல் வெளியாகி, கடந்த ஒரு மாதத்தில் 175-க்கும் மேற்பட்ட மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இதேபோல், ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட வெற்றி படங்களின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், தற்போது உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசிலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நேற்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜூக்கு, கமல்ஹாசன் உள்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தநிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்தார்.
இதையடுத்து அவருக்கு நன்றி மச்சி என நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ், ‘பீஸ்ட்’ அப்டேட் பிளீஸ் என ட்விட்டரில் கேட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பெங்களூருவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், 2-ம் நாள் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்துகொண்டிருந்த முகமது ஷமியிடம், விஜய் ரசிகர்கள் ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்டநிலையில், தற்போது அந்தப் படத்தின் இயக்குநரிடம், மற்றொரு இயக்குநர் அப்டேட் கேட்டது வைரலாகியுள்ளது.
‘பீஸ்ட்’ படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. எனினும் படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீடுகுறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே அஜித் ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்களிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்டு வைரலான சம்பவம் குறிப்பிடத்தக்கது.