பெங்களூரு-”அடுத்த மூன்றாண்டுகளில் புற்று நோயாளிகள் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட 10 சதவீதம் அதிகரிக்கும்,” என சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கவலை தெரிவித்தார்.கர்நாடக சட்ட மேலவையில், நேற்று நடந்த விவாதம்:அமைச்சர் சுதாகர்: பெங்களூரு, இந்தியா மட்டுமின்றி, உலகிலேயே புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 2025ன் வேளையில் இப்போது இருப்பதை விட, நோயாளிகள் எண்ணிக்கை, 10 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, வாய், மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்காக தாலுகாக்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சையில் சிறந்து விளங்கும், கித்வாய் போன்று மாநிலம் முழுவதும், சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.அடுத்தாண்டு பட்ஜெட்டில் பெலகாவி, மைசூரில் புற்றுநோய் மருத்துவமனைகள் திறப்பது குறித்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே துமகூரு, கலபுரகி, மாண்டியாவில் கித்வாய் சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டுள்ளது.புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆரம்பத்திலேயே பரிசோதித்து, நோயை கண்டுப்பிடித்தால், சிகிச்சையளிப்பது எளிதாக இருக்கும்.மக்கள் பாதுகாப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். புகையிலை பொருட்களின் பழக்கத்தை கை விட வேண்டும்.பா.ஜ., — லட்சுமண் சவதி: புற்று நோய் மேலும் 5 சதவீதம் அதிகமாகும் வாய்ப்புள்ளது. பீடி, சிகரெட், புகையிலை பொருட்களை உட்கொள்ளாதவர்களுக்கும், புற்றுநோய் வருகிறது. மாறிய உணவு பழக்கம், விவசாய நடைமுறையாலும் புற்றுநோய் வரும் என கூறப்படுகிறது.இதுபற்றி நாள் முழுவதும் விவாதித்து, தீர்வு காண வேண்டும். இதற்காக சபை தலைவர், நேரம் ஒதுக்க வேண்டும்.
Advertisement