மந்திரிகளின் தனி உதவியாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் ஏன்? கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

திருவனந்தபுரம்:
கேரளாவில் முதல்- மந்திரி உள்பட அனைத்து மந்திரிகளுக்கும் தனி உதவியாளர்கள் உள்ளனர்.
மந்திரிகளின் தனி உதவியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது. தனி உதவியாளர்கள் 2 ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்தால் அவர்கள் அரசின் ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள் ஆவர்.
இந்த ஓய்வூதியம் தனி உதவியாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு மாதம் தோறும் ரூ.1.46 கோடி செலவாகிறது.
இந்த விவகாரம் கேரள கவர்னரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து அவர் இதுபற்றி கேள்வி எழுப்பினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து இப்பிரச்சினை தொடர்பாக கேரள கவர்னருக்கும், அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டும் கேரள அரசை விமர்சனம் செய்துள்ளது.
கேரள அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெட்ரோலிய நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு டீசல் வழங்குவதாகவும், இதனை கட்டுப்படுத்த தனி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கேட்டு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது டீசல் விலை உயர்வால் அரசுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கேரளாவில் மந்திரிகளின் தனி உதவியாளர்கள் 2 ஆண்டு பணி செய்தாலும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது ஏன்? இதுபோன்ற நடைமுறை வேறு எங்கும் இல்லை. இதற்கான பணம் அரசுக்கு எங்கிருந்து வருகிறது, என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும் இப்பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டின் அதிருப்தியை கேரள அரசுக்கு தெரிவிக்குமாறு வழக்கில் ஆஜரான வக்கீலிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.