மாலத்தீவு,
மாலத்தீவுக்கு பல உதவிகளை செய்துவரும் இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா பல சந்தர்ப்பங்களில் தாராளமாக மாலத்தீவுக்கு உதவி செய்தது. இந்தியா அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை வழங்கியது.
எங்களது பொருளாதாரத்தை மீட்டெடுக்க 25 கோடி டாலர் மதிப்பிலான நிதிப் பத்திரங்களை இந்தியா வாங்கியுள்ளது. மாலத்தீவில் சுகாதார சேவைகளை வழங்குவதற்கு தேவையான பல உபகரணங்களை இந்தியாவிலிருந்து பெற்றுள்ளோம்.
அதே நேரத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை உறுதி செய்வதற்காக, இரு நாடுகளுக்கு இடையே ஒரு பயணத் தாழ்வாரம் அமைக்கப்பட்டது.
அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் மாலத்தீவு மக்கள் இந்தியா சென்று சிகிச்சை பெற நடைமுறையை இந்தியா எளிதாக்கியது, இந்திய நாட்டிற்கு செல்ல அனுமதித்தது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் எங்கள் முயற்சிக்கு உதவிகரமாக இருந்த எங்கள் நட்பு ரீதியான கூட்டாளியாக இருக்கும் இந்தியாவுக்கு, மாலத்தீவு மக்கள் சார்பாக நான் நன்றி தெரிவிக்க கடமை பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் இந்தியாவை பாராட்டி பேசினார்.