சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம் (30). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், நேற்று காலை தனது வீட்டில் புதிய மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மின் இணைப்பு கொடுக்க முற்பட்ட நிவாஸ் ரத்தினம் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் துடி துடித்த கணவரை காப்பாற்ற அவரது மனைவி ஹேமா (25) தனது இரண்டு வயது மகள் நிகன்யாவுடன் வந்துள்ளார். இதில் மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து மாலை வரை இவர்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அருகில் வசிக்கும் பெண் ஒருவர் நிவாஸ் ரத்தினம் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் சமையலறை அருகே கணவன், மனைவி, குழந்தை என மூவரும் அசைவற்று கிடந்ததை கண்ட அப்பெண் அர்களை எழுப்ப முயன்றுள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. உடனே சுதாரித்த அவர் சட்டென்று விலகி சப்தமிட்டார்.
அவரது அலறல் சப்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து மின் ஒயரில் சிக்கிய மூவரையும் மீட்டு பரிசோதித்தனர். அப்போதுதான் அவர்கள் ஏற்கனவே மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார், மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி, குழந்தை என ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவம் வேட்டங்குடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM