கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, நகைக்கடை, அலுவலகம், உறவினர்களின் வீடு, உதவியாளர் வீடு என 6 மாவட்டங்களில் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், உதவியாளர் சந்தோஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் 41 இடங்கள் ,சென்னையில் 8 இடங்கள் ,சேலத்தில் 4 இடங்கள் ,திருப்பத்தூரில் 2 இடங்கள் ,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடம் , வெளி மாநிலத்தில் ஒரு இடம் என 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை, பாலக்காடு சாலை குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்..பி.வேலுமணி. கடந்த 2016-21 அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். அதிமுக கொறடாவாகவும் உள்ளார்.
இந்நிலையில், அவர் மீது இன்ஸ்பெக்டர் எழிலரசி கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் ஒரு புகார் அளித்தார். அதில்,”முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக 3,928 சதவீதம், அதாவது ரூ.51.09 கோடி சொத்து சேர்த்து உள்ளார்,”எனப் புகார் அளித்தார்.
அதன் பேரில் எஸ்.பி.வேலுமணி , அவரது சகோதரர் அன்பரசன் ,அவரது மனைவி ஹேமலதா , கான்டிராக்டர் சந்திரசேகர் ,சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேனி ,கார்த்தி ,சுந்தர் ,விஷ்ணுவர்தன் ,சரவணக்குமார் ஆகிய 10 பேர் மீதும் மற்றும் ஸ்ரீமகா கணபதி ஜூவல்லர்ஸ், கன்ஸ்ட்ரோன்மேன் கூட்ஸ் நிறுவனம், ஆலம் கோல்டு டைமண்ட் நிறுவனம் ஆகிய 3 கம்பெனிகள் என 13 பேர் மீது கூட்டுச்சதி ,ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கோவை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று வழக்குப்பதிந்தனர்.
இதைத் தொடர்ந்து சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு இன்று காலை 6 மணிக்கு டி.எஸ்.பி மதியழகன் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் குழுவினர் வந்தனர். அப்போது வீட்டில் எஸ்.பி.வேலுமணி , மனைவி , மகன் உள்ளிட்டோர் இருந்தனர். வீட்டில் இருந்தவர்களை ஓரிடத்தில் அமரச் சொல்லிவிட்டு போலீஸார் தங்களது சோதனையை தொடங்கி நடத்தினர்.
அதேபோல் கோவையில் அன்பரசன் வீடு , வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் உள்ளிட்ட 41 இடங்களிலும் ,சென்னையில் 8 இடங்கள் ,சேலத்தில் 4 இடங்கள் ,திருப்பத்தூரில் 2 இடங்கள் ,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடம், கேரளாவில் ஒரு இடம் என 58 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
அதிமுகவினர் திரண்டனர்
சோதனை குறித்து தகவல் அறிந்தவுடன் எஸ்.பி.வேலுமணி வீட்டு முன்பு அதிமுகவினர் திரண்டனர். திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.