புதுடெல்லி: மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி பெண் அல்ல; ஆண் எனக் கூறி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இம்மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த ஒருவர், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது மனைவி ஒரு ஆண்; பெண் அல்ல; அவர் ஆண் என்பதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். அவரின் அந்தரங்க உறுப்புகள் ஆண்களின் உறுப்புகள் போல இருப்பதால், அவருடன் என்னால் வாழ முடியாது. எனவே அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘வாய்மொழி ஆதாரத்தின் அடிப்படையில் உங்களது குற்றச்சாட்டை ஏற்க முடியாது. உங்களது மனைவி ஆண் என்பதற்கான மருத்துவச் சான்றுகளை சமர்பிக்க வேண்டும். அதனால் விவாகரத்துக்கான காரணத்தை ஏற்க முடியாது’ எனக்கூறி வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இம்மனுவை சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்றுக் கொண்டது. இம்முறை சுப்ரீம் கோர்ட்டில் தனது மனைவியின் மருத்துவ அறிக்கையை மனுதாரரான கணவர் தாக்கல் செய்திருந்தார். அதனால், இம்மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். பின்னர், கணவரின் மனு மீது பதில் அளிக்குமாறு மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பவும், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.